தமிழ்நாட்டில் 3 முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வப்போது நடைபெறும் காவல்துறை கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டு சிலருக்கு பாதுகாப்பு வழங்கப்படும், அச்சுறுத்தல் இல்லாதபட்சத்தில் சிலருக்கு வாபஸ் பெறப்படும்.
சம்மந்தப்பட்டவர்களிடம் இதுகுறித்து கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகிய மூவரின் வீட்டில் இருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரது வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய 5 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்பட்சத்தில் மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.