சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, முதல்வர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதற்கேற்ப பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் முதல்வர் பயணம் மேற்கொண்டார். முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.
சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, உயர்தர வேலைவாய்ப்பு, உயர்தர முதலீடு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு, முதல்வர் அமெரிக்கா செல்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதல்வர் ஸ்டாலின் நாளை (ஆக.27) இரவு சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். 28-ம் தேதி சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதல்வர், அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். 31-ம் தேதி நடக்கும் நிகழ்வில், புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார். பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கிறார்.
செப்டம்பர் 2-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்டு சிகாகோ செல்கிறார். அங்கு 12-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு முதலீட்டாளர்களை சந்திக்கிறார். ‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் உள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசுகிறார். இதற்கிடையே, செப்.7-ம் தேதி அயலக தமிழர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 12-ம் தேதி சென்னை திரும்புகிறார்.
இந்நிலையில், முதல்வரின் பயண முன்னேற்பாடுகளுக்காக, தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, அமெரிக்கா சென்றுள்ளார். முதல்வர் பங்கேற்க உள்ள ‘சிகாகோ – அமெரிக்க தமிழர்கள் உடனான சந்திப்பு’ நிகழ்ச்சி தொடர்பாக சிகாகோவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகளுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார். அமெரிக்கா வரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.