தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு பண்டகசாலைகளில் நாளை முதல் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை | Diwali special collection sale from tomorrow in co operative stores across tn

1331909.jpg
Spread the love

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகளில் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை நாளை தொடங்குகிறது. வெளிச்சந்தையைவிட குறைவான விலைக்கே விற்கப்படுவதால், தீபாவளி சிறப்பு தொகுப்புகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, கூட்டுறவு துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவை பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் ‘கூட்டுறவு கொண்டாட்டம்’ என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை வரும் 28-ம் தேதி (நாளை) தொடங்க உள்ளது.

பிரீமியம், எலைட் என 2 வகை: இந்த மளிகை பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பு பிரீமியம் மற்றும் எலைட் என 2 வகையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பிரீமியம் தொகுப்பில் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு – தலா 200 கிராம், வறுகடலை (குண்டு) – 100 கிராம், மிளகு, சீரகம் – தலா 25 கிராம், வெந்தயம், கடுகு, சோம்பு – தலா 50 கிராம், நீட்டு மிளகாய், தனியா, புளி, ரவை – தலா 100 கிராம், ஏலக்காய் – 5 கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பு ரூ.199-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

எலைட் தொகுப்பில் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு – தலா 250 கிராம், வறுகடலை (குண்டு) – 200 கிராம், மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, சோம்பு – தலா 50 கிராம், நீட்டு மிளகாய் – 250 கிராம், தனியா – 200 கிராம், புளி, ரவை – தலா 100 கிராம், ஏலக்காய் – 5 கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பு ரூ.299-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

அதிரசம் – முறுக்கு காம்போ: மேலும், ‘அதிரசம் – முறுக்கு காம்போ’ என்ற விற்பனை தொகுப்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், பச்சரிசி மாவு – 500 கிராம், பாகு வெல்லம் – 500 கிராம், ஏலக்காய் – 5 கிராம், மைதா மாவு – 500 கிராம், சன்லாண்ட் / கோல்டுவின்னர் சூரியகாந்தி எண்ணெய் – 1/2 லிட்டர் என 5 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பு ரூ.190-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இவை வெளிச்சந்தையைவிட குறைவான விலைக்கே விற்கப்படுகின்றன. எனவே, தீபாவளி சிறப்பு தொகுப்புகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *