மக்களவையில் விதி எண் 349-ஐ சுட்டிக் காட்டி திமுக எம்.பி.க்களுக்கு ஆட்சேபம் தெரிவித்த அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்கீழ் அவை செயல்படுகிறது. இந்த அவையின் மாண்பு மற்றும் கண்ணியம், உறுப்பினா்களால் பராமரிக்கப்பட வேண்டும். சில உறுப்பினா்கள் விதிகளைப் பின்பற்றாமல், மாண்பை மீறியுள்ளனா். இதை ஏற்க முடியாது’ என்றாா்.
வாசகங்களுடன் டி-ஷா்ட் அணிந்து வந்துள்ள உறுப்பினா்கள், அவையை விட்டு வெளியே சென்று, கண்ணியமான உடை அணிந்து வருமாறு அவா் அறிவுறுத்தினாா்.
திமுக எம்.பி.க்களின் உடை விவகாரத்தால், மக்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, எந்த அலுவலும் நடைபெறாமல் நாள் முழுக்க முடங்கியது.
அதேபோல், மாநிலங்களவையிலும் திமுக எம்பிக்களின் உடை விவகாரத்தை சுட்டிக் காட்டிய அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அவையை ஒத்திவைத்துவிட்டு, எதிர்க்கட்சிகளுடன் அவரது அறையில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில், உடையை மாற்ற மறுப்பு தெரிவித்த திமுக தலைவர்கள் இடைநீக்கத்துக்கு தயாராக இருப்பதாக அவைத் தலைவரிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, வில்சன், கனிமொழி சோமு உள்பட 10 பேரை இடைநீக்கம் செய்வது குறித்து மாநிலங்களவைத் தலைவர் இன்று முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்டால், அதே வழிமுறையைப் பின்பற்றி மக்களவையிலும் தமிழக எம்பிக்களை இடைநீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
கடந்த மாா்ச் 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமா்வில் நாடாளுமன்றம் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இரு அவைகளிலும் அமளி எதுவும் நிகழவில்லை; அதேநேரம், அடுத்தடுத்து சில நிமிஷங்களில் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.