தமிழக சட்டம் – ஒழுங்கு நிலவரம்: இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் ஸ்டாலின் பதில் | CM Stalin renders explanation to EPS charge on rising murders in Tamilnadu

1355002.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 20) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா நேரத்தில் தமிழகத்தில் நிகழும் கொலை சம்பவங்கள் குறித்து பேச அனுமதி கோரினார். நேற்று சேலத்தில் ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக் காட்டி அவர் பேசினார். “அன்றாட நிகழ்வுகள் போல் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் நடந்து வருகிறது.” எனக் கூறினார். ஆனால், அவர் தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துப் பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “எனது தலைமையில் காவல்துறை குற்றச் சம்பவங்களைக் கையாள்வதிலும், தடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குற்றச் சம்பவங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தை ஒப்பிடுகையில் திமுக ஆட்சியில் பழிக்குப்பழி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன. ஆனாலும், திமுக ஆட்சியில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது போல் தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. எந்தக் கட்சியினர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றப் பின்னணி உடையோரை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை சிறப்பாக மேற்கொள்கிறது.” என்றார்.

அதிமுக வெளிநடப்பு: சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், “தமிழகத்தில் அன்றாடம் கொலைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதுதான் இந்த ஸ்டாலின் மாடல் அரசின் சாதனைப் பட்டியல். நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை சம்பவத்தில் புகார் கொடுத்தவரிடம் போலீஸ் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளது. அதன் விளைவாக அந்த நபர் உயிரிழந்தார். ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு நிகராக செயல்பட்ட தமிழக காவல்துறை இன்று கட்டுப்பாட்டில் இருக்கிறது.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *