தமிழக மீனவர்கள் கைது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: மத்திய, மாநில அரசுகளுக்கு இபிஎஸ் வலியுறுத்தல் | Edapadi Palaiswamy insists centre, state to find permanent solution to TN fishermen issue

1348669.jpg
Spread the love

சென்னை: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்படி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “25.1.2025 ம் தேதி வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதும், மீனவர்களது படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்வதும், சேதப்படுத்துவதும் அதிகரித்துள்ளது என்றும், விடியா திமுக அரசு மீனவர்கள் கைது செய்யப்பட்டவுடன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது வேலை முடிந்துவிட்டதாக கருதி அடுத்த வேலையை பார்க்கப் போய்விடுவதாக பாதிக்கப்படும் மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதையும், படகுகளை பறிமுதல் செய்வதை தடுக்கவும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் 39 எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்க வலியுறுத்துகிறேன். மத்திய அரசும் காலம் தாழ்த்தாது உடனடியாக இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திமுக சார்பில் வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதகா, காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கவேல், தினேஷ், காரத்திகேசன், செந்தமிழ், பட்டினச்சேரியை சேர்ந்த மைவிழிநாதன், வெற்றிவேல், தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடியை சேர்ந்த நவெந்து, வானகிரியை சேர்ந்த ராஜேந்திரன், ராம்கி, நாகை மாவட்டம் நம்பியார் நகர் சசிகுமார், நந்தகுமார், பாபு, குமரன் ஆகிய 13 பேர் கடந்த 26-ம் தேதி காலை 10 மணியளவில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று இரவு 9.30 மணியளவில் கோடியக்கரைக்கு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 13 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டபோது படகிலிருந்து தவறி கடலில் விழுந்த இரண்டு மீனவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

அண்மைக் காலமாக தொடர்ச்சியாக காரைக்கால், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது மீனவர்களிடையே அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *