தமிழக மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசுக்கு மனமில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கரும்பு டன்னுக்கு ரூ.4,000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான அறிவிப்பு, தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் இல்லை. எனினும், மானியக் கோரிக்கையின்போது நிறைவேற வாய்ப்புள்ளது. தமிழக முதல்வரும், துறை அமைச்சரும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, அவற்றை நிறைவேற்ற வேண்டுகோள் விடுக்கிறேன். அதேபோல, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் பங்கு கேட்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். எங்கள் கட்சி நிலைப்பாட்டை நாங்கள்தான் முடிவு செய்ய முடியும். புற அழுத்தங்களுக்கு இணங்க முடியாது. எங்கள் கட்சியின் வலிமை, கூட்டணியில் எங்களது இருப்பு, அன்றைக்கு நிலவும் அரசியல் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் எங்கள் கோரிக்கையை முன்வைப்போம்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது தொடர்கிறது. இது தொடர்பாக தமிழக அரசும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. மத்திய அரசால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும். ஆனால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசுக்கு மனமில்லை. தமிழக மக்கள் மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் அணுகுவதே இதற்கு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.