தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் சம்பா – தாளடி பருவ அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அதன் மூலம் கிடைக்கும் நெல்லை கொள்முதல் செய்ய போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் உழவர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், அது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சம்பா – தாளடி பருவ நெல் கொள்முதலுக்காக டிசம்பர் மாத இறுதியிலும், ஜனவரி மாதத் தொடக்கத்திலும் அதிக எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், ஜனவரி மாதம் பிறந்து 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை போதிய எண்ணிக்கையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. ஓரிரு இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டாலும் கூட அங்கு பல்வேறு பற்றாக்குறைகளைக் காரணம் காட்டி நெல் கொள்முதல் நடைபெறவில்லை.
காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு 7.27 லட்சம் ஏக்கரில் மட்டுமே சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் 2.51 லட்சம் ஏக்கர் கூடுதலாக 9.78 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இது தவிர தாளடி பருவ நெல் சாகுபடி பல லட்சம் ஏக்கரில் செய்யப்பட்டிருப்பதால், நடப்பாண்டில் அதிக அளவில் நெல் கொள்முதலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில், அதிக எண்ணிக்கையில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். ஆனால், இயல்பான எண்ணிக்கையில் கூட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.