'தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள்' – திருமாவளவன்

Dinamani2f2024 09 192fsccg4z0e2fthiruma.jpg
Spread the love

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள், அவர்கள் ஆளுநரின் பேச்சுக்கு இணங்க மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

“தமிழகத்தில் இளைஞர்களுக்கு மும்மொழி தேவை என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறுகிறார். ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவே தமிழக ஆளுநர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பழமொழிகள் பேசுகின்றவர்கள் வாழ்கின்றோம். அதிலே ஒன்றுதான் ஹிந்தி.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைக் கட்டாயப்படுத்தி ஹிந்தி கற்க வேண்டும் என்று சொல்வது அவர்களின் ஆதிக்கப் போக்கை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

இதையும் படிக்க | ‘பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல’ – விவசாயிகள் மறுப்பு!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஹிந்தி அல்லாத பிற மொழியை தாய்மொழியாக கொண்ட பிற மாநிலங்களிலும் ஹிந்தியை திணிக்கக் கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு.

தமிழ்நாட்டு மக்களை எதிர்காலத்தில் ஹிந்தி பேசும் மக்களாக மாற்றுவது, ஒரே தேசம், ஒரே மொழி என்று உருவாக்குவது ஹிந்திக்குப் பிறகு சமஸ்கிருதமே இந்தியாவில் ஒற்றை மொழி என மாற்றுவது என செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள். ஆர்.என். ரவி போன்றவர்களின் மாயாஜாலப் பேச்சுக்கு இணங்க மாட்டார்கள்” என கூறினார்.

2026 தேர்தலில் 25 இடங்களில் போட்டியிடுவதே தொண்டர்களின் எண்ணம் என வன்னி அரசு கூறியது குறித்துக் கேட்டதற்கு ‘தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம்’ என்றார்.

மேலும் பேசிய அவர், “விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேர்தல் பணியை தீவிரமாக செயல்படுத்த வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும், களமிறங்கி பணியாற்ற வேண்டும் என ஊக்கப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இயக்க தோழர்களை இயக்குவது, அணி திரட்டுவது என்னும் பொருளில் விடுதலை சிறுத்தைகள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளோம்.

எனவே விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் அரசியல் காய் நடத்த முடியாது என்ற நம்பிக்கை இருக்கிறது. திருமாவளவனை விலை கொடுத்து வாங்க முடியாது” என்றார்.

திருச்சி கரூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழாதன், நிர்வாகி கிட்டு, மாவட்டச் செயலாளர் முசிறி வழக்கறிஞர் கலைச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *