தமிழ் மின் நூலகம் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை: அரசு தகவல் | Tamil e library crosses 10 crore hit views record

1316659.jpg
Spread the love

சென்னை: தமிழ் மின் நூலகம் 10 கோடிப் பார்வைகளைக் கடந்து அருஞ்சாதனை புரிந்துள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2001-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தமிழ் இணைய கல்விக் கழகத்தை தொடங்கி வைத்தார். உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் இணையம் வழியே தமிழைக் கொண்டு சேர்ப்பது இந்நிறுவனத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில், அறிவைப் பொதுமை செய்யும் நோக்கத்தில் 2002-ம் ஆண்டு நூல்களை மின்னுருவாக்கும் முயற்சியில் இறங்கியது தமிழ் இணையக் கல்விக்கழகம். முதலில் நூற்றுக்கணக்கான அரிய தமிழ் நூல்கள் தட்டச்சு வடிவிலும் பிடிஎஃப் வடிவிலும் பதிவேற்றப்பட்டன. பின்னர், நூல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மின்னுருவாக்கத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, கன்னிமாரா நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நூலகம், அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம், உ.வே.சா. நூலகம், தமிழ்நாடு ஆவணக்காப்பகம், அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, அரசு திரைப்படக் கல்லூரி, இந்திய மருத்துவ இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் உள்ள அரிய நூல்களின் லட்சக்கணக்கான பக்கங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டன.

இந்தப் பணிகளுக்கிடையே மின் நூலக இணையதளம் (www.tamildigitallibrary.in) அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2017 அக்டோபர் 11-ம் தேதி தமிழ் மின்னூலகம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. தமிழ் மின்னூலகத் தளத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிப் பக்கங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. சீகன் பால்கு 1716இல் லத்தீன் மொழியில் அச்சிட்ட ‘Grammatica Damulica’ என்னும் தமிழ் இலக்கண நூல், தஞ்சை சரபோஜி மன்னர் தொகுப்புகள், உ.வே.சா.வின் அரிய பதிப்புகள், தென்னிந்தியாவின் முதல் செய்தித்தாளான மெட்ராஸ் கூரியர் இதழ்கள், சித்த மருத்துவச் சுவடிகள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வெளியீடுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சியின் 150-ம் பிறந்தநாள் நிகழ்வைக் கொண்டாடும் வகையில் அவர் தொடர்பான 127 நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், ஒளிப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய www.tamildigitallibrary.in/voc என்ற வ.உ.சி. சிறப்பு இணையப் பக்கம் கடந்த 2022-ம் ஆண்டு நவ.18-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. கருணாநிதியின் நூற்றாண்டை போற்றும் வகையில், ‘கலைஞர்100’ என்னும் தனித்த இணையப் பக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்பக்கத்தில் அவர் தொடர்பான நூல்கள், இதழ்கள், உரைகள், ஒலி-ஒளிப் பொழிவுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் உரிய தேடல் வசதியுடன் வெளியிடப்படவுள்ளன.

பல்வேறு தரப்பினருக்குமான அரிய புதையலாகத் தமிழ் மின் நூலகம் திகழ்கிறது. இம்மின் நூலகம் 2021 மே மாதம் 1.5 கோடிப் பார்வையைக் கடந்தது. 2024 ஜனவரியில் 6.5 கோடிப் பார்வைகளைப் பெற்றிருந்தது. குறுகிய காலத்தில் தமிழ் மின் நூலகம் 10 கோடிப் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *