சென்னை: கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தாமரையே… உதய சூரியனின் கல்விக்கான நிதியை எப்போது தர போகிறாய்?” என கவிதை மூலமாக மத்திய அரசை விமர்சித்தார்.
பொது பள்ளிக்கான மாநில மேடை மற்றும் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் வாசகர் வட்டம் சார்பில் கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் இன்று (செப்.21) நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து சிறப்பித்தார். பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: “கவிஞர் தமிழ்ஒளியின் கவிதை ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்.
தாமரை அல்லியைப் பார்த்து கேட்கிறது உனக்கு ஏன் கதிரவனின் முகத்தை பார்க்க விருப்பம் இல்லையா? என்று அதில் கூறியிருப்பார். இன்றைக்கு கவிஞர் தமிழ்ஒளி இருந்திருந்தால் இன்றைய காலகட்டத்தில் அதை எப்படி சொல்லியிருப்பார்? தாமரையே, தாமரையே நீ அல்லியை கேட்பது இருக்கட்டும். ஒட்டுமொத்தமாக உதயசூரியன் கல்விக்கான நிதியை உன்னிடம் கேட்கிறதே! அதை நீ எப்போது தரப் போகிறாய்? என்று தான் கவிஞர் எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.
ஒரு சில நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது மனதுக்குள் ஒரு திருப்தி இருக்கும். மன நிம்மதி இருக்கும். அப்படித்தான் மறைந்த தலைவர் அண்ணா படித்த கல்லூரி வளாகத்தில், இன்றைக்கு கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டை கொண்டாடுவது என்பது வாழ்நாளில் நமக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். கவிஞர் தமிழ்ஒளியை பாரதியாரின் வழித்தோன்றலாக வந்த பாரதிதாசனின் மாணவர் என்றே நாம் சொல்லலாம். அவர் எழுதியிருக்கிற பாடல்களை பார்த்தாலே தெரியும்.
இந்த இருவரின் பிரதிபலிப்பும் அதிலிருக்கும். அதை உணர முடியும். முழுமையாக சமுதாயத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கவிஞர். அவர் எழுதிய புத்தகங்களை எல்லாம் ஒவ்வொருவரும் படித்துப் பார்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. தமிழ் மொழி என்பது எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தியதில் எங்களுக்கு வழிகாட்டியாக, முன்னோடியாக கவிஞர் தமிழ்ஒளி இருக்கிறார். அவரது கருத்துகளை வாழ்நாள் முழுவதும் உள்வாங்குவோம்,” என்று அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து, ‘தமிழ் வாழும் வரை கவிஞர் தமிழ்ஒளி வாழ்வார்’ என்ற புத்தகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட, வழக்கறிஞர் செந்தில்நாதன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். பின்னர் பள்ளி மாணவ – மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார். முன்னதாக, கல்லூரி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் தமிழ்ஒளியின் திருவுருவ படத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கவிஞர் தமிழ்ஒளியின் பாடல்களுடன் விமரிசையாக தொடங்கிய இவ்விழாவில், சாதியில்லா தமிழகம் வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையிலான தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவிகளின் கும்மியாட்டம் அரங்கில் இருந்த அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து ‘கவிஞர் தமிழ்ஒளி எனக்குள் கடத்திய செய்தி’ என்ற தலைப்பில் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் உத்வேகத்துடன் பேசினர்.
இந்நிகழ்வில் பொது பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் கஜேந்திர பாபு, தலைவர் ரத்தின சபாபதி, பச்சையப்பன் கல்லூரி வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர் முனைவர் ரேவதி, வழக்கறிஞர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.