திண்டிவனம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு | Chief Minister inspects government primary health center near Thindivanam

1348595.jpg
Spread the love

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட எல்லை கிராமமான ஒலக்கூரில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் கட்டப்பட்டுள்ள ஏ.கோவிந்தசாமியின் நினைவகம் மற்றும் சமூக நீதிபோராளிகள் மணிமண்டபத்தை நாளை (ஜன.28) முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார். இதையொட்டி இன்று (ஜன.27) மாலை சென்னையிலிருந்து காரில் வந்த முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்ட எல்லை கிராமமான ஒலக்கூரில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது சுகாதார நிலையத்தில் உள்ள காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனை பிரிவு, அறுவை சிகிச்சைக்குப்பின் கவனிப்பு பிரிவு போன்றவற்றை ஆய்வு செய்தார். பின்னர் பணியாளர்களின் வருகைப் பதிவேடு, உள் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை விவர பதிவேடுகள், மருந்துகள் இருப்பு பதிவேடு போன்றவற்றை ஆய்வு செய்து அதன் விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் நிதியினை தவணை தவறாமல் வழங்குவதையும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை உரிய நேரத்தில் வழங்குவதையும் மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் சுகாதார நிலையத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்.

தினமும் சுமார் 300 நோயாளிகள் வருகை தரும் இந்த சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும். அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவிற்கு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது விழுப்புரம் ஆட்சியர் பழனி, வட்டார மருத்துவ அலுவலர் செந்தில் குமார், மருத்துவ அலுவலர் ரகுராம் செவிலியர் தனம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து திண்டிவனம் மேம்பாலம் அருகே சாலையோரம் காத்திருந்த பொதுமக்களிடம் நடந்து சென்று மனுக்களை பெற்றார். பின்னர் சுமார் 500 மீட்டர் தூரத்தில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் விழுப்புரம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து அவர் விழுப்புரத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *