திமுக Vs நாதக | ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு | Erode East bypoll begins: DMK Candidate casts vote and expresses confidence over victory

1349640.jpg
Spread the love

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (5-ம் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கியது. ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மா.கி.சீதாலட்சுமி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்கள் உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (5-ம் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கியது. இத்தேர்தலில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 9 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பொது விடுமுறை.. ஈரோடு சம்பத்நகரில் உள்ள வாக்குசாவடியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தனது வாக்கினைப் பதிவு செய்தார். அப்போது அவர் கூறும்போது, ‘ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையம் பொது விடுமுறை அறிவித்துள்ளது.

இத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் வேறு இடங்களில் பணிபுரிந்தால் அவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்’ என்றார்.

‘மாபெரும் வெற்றியை வாக்காளர்கள் அளிப்பார்கள்’ – ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ள வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார். அப்போது, “தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆசியுடன், அமைச்சர் முத்துசாமியின் வழிகாட்டுதலுடன் இடைத்தேர்தலை சந்தித்துள்ளேன். நான்கு ஆண்டுகால திராவிட மாடல் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் காரணமாக எங்களுக்கு மாபெரும் வெற்றியை வாக்காளர்கள் அளிப்பார்கள். இந்த தேர்தலில் கிழக்கு தொகுதி மக்கள் அனைவரும் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.”என்றார்.

6 மணிக்கு நிறைவு: ஈரோடு கிழக்கு தொகுதியின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க சக்கர நாற்காலி, சாய்தள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் துணைராணுவத்தினர் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான, சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 8-ம் தேதி காலை நடக்கிறது. அன்று மாலை தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரியவரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *