புது தில்லி: கேரள மாநிலம் திரிச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பீச்சி என்ற பகுதிக்கு அருகே, சாலையில் சென்றுகொண்டிருந்த காரை மடக்கி நிறுத்தி, அதிலிருந்த இரண்டு பேரை கடத்திய கும்பல், அவர்களிடமிருந்த 2.5 கிலோ தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், சாலையில் சென்றுகொண்டிருந்த காரை வழிமறித்த 12 பேர் கொண்ட கும்பல், 2.5 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த போது, பின்னால் வந்த வாகனத்தின் டேஷ்கேமராவில் ஒட்டுமொத்த கொள்ளைச் சம்பவமும் பதிவாகியிருப்பதன் விடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியிருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டில், புதிய மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் இடத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மெதுவாக சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு வாகனத்தைக் குறி வைத்து பின்தொடர்ந்து வந்த மூன்று கார்களில் இருந்து 12 பேர் இறங்கி, அந்த காருக்குள் இருந்த இரண்டு பேரை கடத்திச் செல்கிறார்கள். அவர்களிடமிருந்து 2.5 கிலோ தங்க நகைகளையும் அவர்கள் கடத்திச் சென்றது விடியோவில் பதிவாகியிருக்கிறது.
இது குறித்து புதன்கிழமை புகார் வந்ததையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் செப்டம்பர் 22ஆம் தேதி நடந்துள்ளது. கடத்தப்பட்டவர்கள் அருண் சன்னி, ரோஜி தாமஸ் என்பதும், கடத்தப்பட்ட இவர்கள் பின்னர் கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்டதாகவும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.1.84 கோடி என்றும் தெரிய வந்துள்ளது.