“திருப்பரங்குன்றம் பிரச்சினை பெரிதாக மாவட்ட நிர்வாக அணுகுமுறையே காரணம்” – சு.வெங்கடேசன் எம்.பி | Thiruparankundram issue is largely due to the district administration’s approach – Su Venkatesan

1349735.jpg
Spread the love

மதுரை: அயோத்தி துவங்கி சம்பல் வரை அரங்கேற்றிய நிகழ்ச்சி நிரலை திருப்பரங்குன்றத்திலும் அச்சு அசலாக அதே மாதிரியை இவர்களால் அரங்கேற்ற முடிகிறது என்றால் மாவட்ட நிர்வாகம் மொத்தமாக தோல்வி அடைந்துள்ளது என்பதே பொருள். திடீரென இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதாக மாறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை இருக்கிறது என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது இந்து அறநிலையத்துறைக்கான உரிமை என்ன, சிக்கந்தர் தர்காவுக்கான உரிமை என்ன என்பது குறித்து, பல ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தீர்ப்பு வழங்கி உறுதிப்படுத்தியுள்ளன.

திருப்பரங்குன்றத்து மக்களாலோ, அல்லது சம்பந்தப்பட்ட இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தாலோ அல்லது தர்கா நிர்வாகத்தாலோ உரிமை சம்பந்தமான பிரச்சனை எதுவும் இப்போது எழுப்பப் படவில்லை. பின்னர் பிரச்சனையை எழுப்புவது யார்? ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின் அமைப்புகள்தான் ஒன்றாகவும் நன்றாகவும் இருக்கும் ஊரில் மதவெறியை கிளப்பிவிட்டு தங்களின் வாக்கு வங்கியை பலப்படுத்த இதுவொன்றே வழி என்று இறங்கியுள்ளன.

அயோத்தி துவங்கி சம்பல் வரை அரங்கேற்றிய நிகழ்ச்சி நிரலை இங்கும் அரங்கேற்ற முயல்கின்றனர். இவர்கள் தங்களின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றிய இந்த இடங்களில் எல்லாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிமன்றங்கள், இவர்களின் செயல்திட்ட நிறைவேற்றத்தின் பகுதியாக இருந்துள்ளன என்பது கசப்பான உண்மை.

திருப்பரங்குன்றத்திலும் அச்சு அசலாக அதே மாதிரியை இவர்களால் அரங்கேற்ற முடிகிறது என்றால் மாவட்ட நிர்வாகம் மொத்தமாக தோல்வி அடைந்துள்ளது என்பதே பொருள். திடீரென இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதாக மாறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை இருக்கிறது.

இங்கு வழிபாடு சார்ந்த உரிமை பிரச்சனை எழுப்பப்பட்டது என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறார்கள். இந்த பிரச்சனையை எழுப்பியது யார்? தர்காவில் கந்தூரி வழிபாட்டு உரிமையில் எந்த அடிப்படையில் காவல்துறை தலையிட்டது. காவல்துறைக்கு புகார் கொடுத்தது யார்? வருவாய் துறை எந்த அடிப்படையில் இதில் தலையிட்டது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் எல்லாம் இந்துத்துவா அமைப்பினரின் நுண் திட்டங்களுக்குள் பொதிந்து கிடக்கிறது.

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்று அவர்களாகவே கேள்வி எழுப்பி, போலி வாட்ஸ்அப் செய்திகளை உருவாக்கி, பொது சமூகத்தில் பரப்பியவர்கள் குறித்து துளி அளவாவது அக்கறை கொண்டு காவல்துறை தலையீடு செய்ததா? வெறுப்பு பிரச்சாரம் தங்கு தடையின்றி பரப்படும் போது ஒரு நடவடிக்கைகூட காவல்துறையிடமிருந்து இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஜனவரி 27 ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் திமுக, அதிமுக, காங்., சிபிஎம், சிபிஐ, தேமுதிக, விசிக, மநீம, மமக, ஐயூஎம்எல் உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவர்கள் திருப்பரங்குன்றம் மலையில் இது வரை இருந்து வந்துள்ள வழிபாட்டு மரபுகள் என்ன என்பதையும், அதில் தலையீடு செய்து பிரச்சனையை உருவாக்கி மக்கள் ஒற்றுமையை கெடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியருக்கும், காவல் ஆணையருக்கும் மனு அளித்துள்ளனர். மக்கள் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பவர்களை தனிமை படுத்த கோரும் மிக முக்கிய நடவடிக்கை இது. அரசியல் கட்சிகள் மிகுந்த பொறுப்புணர்வோடு இந்த பணியை செய்தன.

இந்த கட்சிகளை சார்ந்தவர்கள் மட்டும்தான், இதற்கு முன் இந்த ஊரில் இருந்தார்களா? மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையில் அயல்நாட்டிலிருந்து ஜனவரி மாதம் தான் திருப்பரங்குன்றத்தில் நுழைந்துள்ளார்களா? காலகாலமாக இருந்து வரும் வழிபாட்டு மரபுகள் பற்றி எதுவும் தெரியாதது போல, கட்சிகள் சொல்வதை எழுதி வாங்கி, நாங்கள் நீதிமன்றத்தில் தருகிறோம் என்று சொல்வது மட்டும்தான் மாவட்ட நிர்வாகத்தின் பணியா?

மதவெறியர்களை தனிமைப்படுத்த வேண்டிய ஒரு பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் மெத்தனமான அணுகுமுறையோடு செயல்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவு நிறைவேற்றப்பட்ட முறையும், நேற்று நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் வாதிட்ட முறையும் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இதற்கு யார் பொறுப்பேற்பது என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி எழுப்பட்டுள்ள பிரச்சனை முருகப்பெருமான் சம்பந்தப்பட்டதோ, மலை சம்பந்தப்பட்டதோ, சிக்கந்தர் தர்ஹா சம்பந்தப்பட்டதோ அல்ல, முழுக்க முழுக்க பாஜக-வின் வெறுப்பு அரசியல் சம்பந்தப்பட்டது.

அக்கட்சியின் தலைவர் ஹெச்.ராஜா, திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்றும், அயோத்தி போல முதல் யுத்தம் திருப்பரங்குன்றத்தில் துவங்கிவிட்டது என்றும் பழங்காநத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஷம் கக்கியுள்ளார்.

எந்த அயோத்தியை தங்கள் அரசியலின் அடிப்படையாக்கினார்களோ அதே அயோத்தியில் இந்த மக்களவை தேர்தலில் தோற்கடித்து விரட்டப்பட்டார்கள். மதவெறியை தனிமைப்படுத்தும் ஆன்மீக பலமும், பாசிசத்தை எதிர்கொண்டு வீழ்த்தும் மதச்சார்பற்ற அரசியலின் தனித்துவமிக்க பலமும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஹெச்.ராஜாவின் மதவெறி கணக்குகளை தவிடுபொடியாக்கும் வலிமை குன்றத்திற்கு உண்டு.

தீய நோக்கங்களுக்காக இறைவனின் பெயரை பயன்படுத்துபவனே ஆன்மீகத்தின் முதல் எதிரி என்பதை நன்கு அறிந்த திருப்பரங்குன்றத்து மக்களும், தமிழகத்து மக்களும் பாஜக-வின் வெறுப்பு அரசியலை முறியடித்து காட்டுவார்கள்” இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *