திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய இந்து முன்னணி அமைப்பின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், கோரிக்கைகளை வெளியிட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து திருப்பரங்குன்றம் மலையைக் காக்க வருகிற பிப். 18 ஆம் தேதி சென்னையில் ‘வேல் யாத்திரை’ பேரணி நடத்த இந்து முன்னணி அமைப்பு அனுமதி கோரியது.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் யுவராஜ், பேரணிக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்து வரும் நிலையில், இன்றைய விசாரணையில், ‘அமைதியான முறையில் பேரணி நடத்தக் கோரியும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை’ என்று மனுதாரர் தரப்பு கூறியது.
“இந்து முன்னணி அமைப்பு பேரணி நடத்த அனுமதி கோரும் பகுதி போக்குவரத்து நெருக்கடி மிகுந்தது. மேலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து, முஸ்லீம்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். எனவே, போராட்டத்துக்கு அனுமதி தர முடியாது” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.