நேற்று (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை “இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம்” என்று தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தீர்ப்பை இந்து அமைப்பினர், பாஜகவினர் வரவேற்றுள்ளனர். ஆனால், “இது மக்கள் நம்பிக்கை வழிபாடு சார்ந்த தீர்ப்பல்ல. மாறாக இந்தியாவின் வடபகுதியில் வழிபாட்டுத் தலங்களை முன்வைத்து மக்களிடம் மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி” என்று சமூக செயற்பாட்டாளர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. நாளை கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் நாளை காலை இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நடக்கவிருக்கிறது.

இந்நிலையில் “திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்’ என்ற நீதிமன்ற தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், “கடந்த பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இதுவரையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத சிக்கந்தர் தர்ஹாவிற்கு அருகே தீபம் ஏற்றவேண்டும் என்று முயற்சித்து வருகிறது. அயோத்தி, மதுரா, காசி, சம்பல் என்று ஒவ்வொரு இடத்திலும் புதிது புதிதாக சர்ச்சைகளை உருவாக்கி மக்களுக்கு இடையே பகைமூட்டி அரசியல் அறுவடை செய்து வரும் இந்தக் கூட்டம் இப்போது திருப்பரங்குன்றம் மலையையும் குறிவைத்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்கவில்லை. தீபம் ஏற்றுவது தொடர்பாக இப்போது உள்ள நடைமுறை தொடர வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு ஏற்கனவே ஒரு தீர்ப்பை கூறியுள்ள நிலையில், அதற்கு நேர் எதிராக தற்போது (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் ‘இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றப்பட வேண்டும்’ என்று தீர்ப்பளித்துள்ளார்;