சமீபத்தில் ரஞ்சி கோப்பை மும்பை அணியில் இருந்து பிருத்வி ஷா நீக்கப்பட்டடார்.
உடல் எடை, போட்டிக்கு முந்தைய பயிற்சியில் சரியாக கலந்து கொள்ளாதது போன்றவை பயிற்சியாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால் நீக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
மூத்த கிரிக்கெட் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், அஜிங்கியா ரஹானே, ஷர்துல் தாக்குர் போன்றவர்கள்கூட வலைப் பயிற்சியில் முறையாக கலந்து கொள்ளும் நிலையில் 25 வயதாகும் பிருத்வி ஷா கலந்து கொள்ளாதது மேலும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் ஏலத்திலும் ரூ.75 லட்சத்துக்குக் கூட யாரும் அவரை ஏலத்தில் தேர்வுசெய்ய முன்வரவில்லை.
சையத் முஷ்டக் அலி டி20 தொடரிலும் பெரிதாக எதுவும் செய்யவில்லை.
இந்த நிலையில் பிரித்வி ஷா குறித்து இங்கிலாந்து பேட்டர் கெவின் பீட்டர்சன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
சில தலைசிறந்த விளையாட்டு கதைகள் கம்பேக் கொடுத்த கதைகள்தான். பிருத்வி ஷாவிற்கு நல்ல மனிதர்கள் உடனிருந்து, அவரது நீண்டநாள் வெற்றிக்கு திட்டமிட்டால் அவரை உட்கார வைத்து பேசுங்கள். சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறி கிரிக்கெட் பயிற்சி செய்து உடல்நலத்தை நன்றாக வைக்கச் சொல்லுங்கள்.
சரியான பாதைக்குச் சென்றால் பழைய வெற்றிகள் மீண்டும் வரும். நல்ல திறமைசாலி எல்லாவற்றையும் வீணடிக்கிறார். அன்புடன் கேபி எனக் கூறியுள்ளார்.
Some of the greatest sports stories are COMEBACK stories.
If Prithvi Shaw has decent people around him who care about his long term success, they’d sit him down, tell him to get off social media & train his absolute backside off in getting super fit. It’ll get him back into the…— Kevin Pietersen (@KP24) December 3, 2024
பிருத்வி ஷா தனது 18 வயதில் அறிமுகமானபோது அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்று வர்ணிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அதன்பின்னர் அணியில் தேர்வாகவில்லை.
இந்த ரஞ்சி கோப்பையில் பரோடா அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸில் முறையே 7, 12 ரன்களும், மகாராஷ்டிர அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸில் முறையே 1, 39 ரன்கள் எடுத்திருந்தார்.
5 டெஸ்ட்டில் 339 ரன்கள் குவித்துள்ளார். 79 ஐபிஎல் போட்டிகளில் 1892 ரன்களும் 147.46 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடியுள்ளார்.