தில்லி பேரவைத் தேர்தல் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது, பாஜக தில்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல, வரலாற்று சிறப்புமிக்கது.
தில்லியில் தாமரை மலராத பகுதியே இல்லை. எல்லா மொழி பேசும் மக்களும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். தில்லியின் தொலைநோக்கு பார்வை, நம்பிக்கை வென்றுள்ளது.
தில்லியை சொத்தாக கருதியவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். தாங்கள்தான் தில்லியின் உண்மையான உரிமையாளர்கள் என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். தில்லியை சூழ்ந்த ஆடம்பரம், அராஜகம், ஆணவம் தோற்கடிக்கப்பட்டன.
இரட்டை இன்ஜின் அரசால், தில்லி இனி இரட்டை வேகத்தில் வளர்ச்சிப் பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பெரும்பான்மைக்கு 36 இடங்கள் தேவை என்ற நிலையில் 48 இடங்களை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.