சென்னை: கோயம்பேடு சந்தையில் குப்பைகளை முறையாக அகற்றாததால் சகதிக்காடாக மாறி வருவதாகக்கூறி காய்கறி வியாபாரிகள் சந்தை வளாகத்துக்குள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோயம்பேடு சந்தையில், காய்கறி விற்பனை வளாகத்தில் 200 பெரிய கடைகள் மற்றும் 1965 சிறிய கடைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 165 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்தில் உருவாகும் குப்பைகளை, சந்தை நிர்வாகம் முறையாக அகற்றாததால் மழை காலங்களில் அதன் மீது பொதுமக்களும், வாகனஙகளும் சென்று சகதிக்காடாக மாறி இருப்பதாக வியாபாரிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக சந்தை நிர்வாகத்துக்கும் வியாாரிகள் புகார் அளித்துள்ளனர்.
உரிய தீர்வு கிடைக்காத நிலையில் இன்று காலை சந்தை வளாகத்தில் 5-வது நுழைவு வாயில் சாலையில் காய்கறி சிறுமொத்த வியாபாரிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சந்தை நிர்வாகத்தினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வுகாண்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தை வியாபாரிகள் கைவிட்டனர்.
இது தொடர்பாக சிறு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறியதாவது: சந்தை நிர்வாகத்திடம் குப்பை அகற்ற போதிய பணியாளர்கள் இல்லை. குப்பை ஏற்றி செல்லும் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் காய்கறி சந்தை வளாகத்தில் குப்பைகளை முறையாக அற்றுவதில்லை.
மழை காலங்களில் இந்த குப்பைகள் பொதுமக்கள் நடமாட்டத்தால் கூழாக மாறி, அங்கு சகதிக்காடாக காட்சியளிக்கிறது. அங்கு கழிவுநீரும் தேங்குகிறது. இது துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இப்பகுதிகளுக்கு பொதுமக்களும், வியாபாரிகளும் வருவதை தவிர்க்கின்றனர். இந்த கழிவிலிருந்து ஈக்கள் மற்றும் கொசுக்களும் அதிகமாக உற்பத்தியாகின்றனர். அதனால் குப்பைகள், கழிவுநீர் தேக்கம் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரியும், முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வலியுறுத்தியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.