மத்திய பாஜக அரசுதான் தேர்தல் பத்திரங்கள் நடைமுறையை அறிமுகப்படுத்தியது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நிதி அளிக்கப்பட்டன. சட்டவிரோதமாக கட்சிகளுக்கு கறுப்பு பணத்தை நன்கொடையாக வழங்கும் முறையை ஒழிக்கும் வகையில் இந்த புதிய நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வந்தது.
இருப்பினும், இந்த தேர்தல் பத்திரம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறிய உச்சநீதிமன்றம், அதனை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஒவ்வோர் ஆண்டும் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த நபர்கள், நிறுவனங்கள் நன்கொடை வழங்கினர் என்ற விபரத்தை வெளியிடவும் உத்தரவிட்டது.
இத்தகைய சூழலில்தான், மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து மத்திய அரசு மிரட்டி, பாஜகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணத்தை நன்கொடை பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.