நெல்லையில் 2வது நாளாக தொடரும் கேரள மருத்துவக் கழிவுகள் அகற்றும் பணி

Dinamani2f2024 12 182f9v9t17gt2fwaste.jpg
Spread the love

நெல்லையில், கேரளத்திலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

நெல்லையில் ஏழு இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில், ஐந்து இடங்களிலிருந்து முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. மேலும் 2 இடங்களில் அகற்றும் பணி தொடர்கிறது.

நெல்லை மாவட்டத்தில் கேரளத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் 7 இடங்களில் கொட்டப்பட்ட நிலையில் இன்று முதல் கட்டமாக கேரள அரசு சார்பில் ஐந்து இடங்களில் உள்ள கழிவுகள் முழுவதும் அகற்றப்பட்டு 18 லாரிகளில் தமிழக காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக எல்லையில் கேரள காவல்துறையினர் பாதுகாப்புடன் இந்த கழிவுகள் கொல்லம் எடுத்துச் செல்லப்படுகிறது.

மேலும் இந்த கழிவுகள் கொட்டியது சம்பந்தமாக நெல்லை மாவட்டத்தில் 4 காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கேரள மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ மற்றும் பிற கழிவுகள் அகற்றும் பணிகள் இன்று கேரளா அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய துறை சார்பில் நடைபெற்றது. இதற்காக திருவனந்தபுரம் மாவட்ட உதவி ஆட்சியாளர் சாக்‌ஷி தலைமையில் 50 பேர் கொண்ட குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு 5 இடங்களில் முழுவதுமாக கேரள கழிவுகள் அகற்றப்பட்டு அந்த இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி, ப்ளீச்சிங் பவுடர் உள்ளிட்டவைகள் தெளிக்கப்பட்டன. கொண்டா நகரம் மற்றும் பழவூர் பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மாநில மருத்துவ கழிவுகள் இன்று காலை முதல் மீண்டும் அகற்றப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

இலந்தைகுளம், வேளார்குளம், கோடகநல்லூர், பாரதியார் நகர், திடியூர் ஆகிய பகுதியில் உள்ள மருத்துவக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு சுமார் 18 லாரிகளில் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு முதல் கட்டமாக அனுப்பப்பட்டுள்ளது.

பழவூர், கொண்டா நகரம் ஆகிய பகுதிகளில் இரவு நேரமாகிவிட்டதினாலும் மழை தூறல் இருப்பதினாலும் அங்கு கழிவுகள் அகற்றுப்பணிகள் நிறுத்தப்பட்டது. இந்தப் பணிகள் இன்று காலை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை கேரள கழிவுகளை நெல்லை மாவட்டத்தில் கொட்டியது சம்பந்தமாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நெல்லை சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த மாயாண்டி, மனோகரன், சேலம் மாவட்டம் ஓமநல்லூரைச் சார்ந்த லாரி ஓட்டுநர் செல்லத்துரை, கேரள மாநில கழிவு மேலாண்மை அலுவலர் நிதின் ஜார்ஜ் மற்றும் கேரள கழிவுகளை ஏற்றும் ஏஜெண்டாக செயல்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த சடானா நந்தன் ஷாஜி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *