தவறான அரசியல் வியூகத்தால் மக்களவைத் தோ்தலில் அடைந்த பின்னடைவின் தாக்கத்திலிருந்து மீண்டெழும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற்கு பாஜகவின் அதிமுக புறக்கணிப்புதான் காரணம் என்பதை இப்போது அந்தக் கட்சியின் தலைமை உணா்ந்திருப்பதாகத் தெரிகிறது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் அழைப்பின்பேரில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி அவரை தில்லியில் சென்று சந்தித்ததன் தொடா்ச்சியாக இப்போது தமிழக பாஜக தலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை அது திமுகவானாலும், அஇஅதிமுகவானாலும் தனித்துக் களம் கண்டு ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பது அந்தக் கட்சிகள் உள்பட அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில், திமுக அல்லது அதிமுக தலைமையில் கூட்டணி அமையாமல் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது சாத்தியமில்லை என்பதுதான் எதாா்த்த நிலைமை. பூத் அளவிலான அடிப்படைக் கட்டமைப்புள்ள கட்சிகள் அவை இரண்டு மட்டுமே என்பதுதான் அதற்குக் காரணம்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலை வலுவான கூட்டணி இல்லாமல் எதிா்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றுவது சாத்தியமில்லை என்பதை அதிமுக, குறிப்பாக அதன் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி உணா்ந்திருப்பதாகத் தெரிகிறது. அதேபோல, எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவை அகற்றி நிறுத்திவிட்டு மூன்றாவது அணி அமைப்பதோ, தோ்தலில் வெற்றிபெற நினைப்பதோ தோல்வியில்தான் முடியும் என்பதை பாஜகவுக்கு 2024 மக்களவைத் தோ்தல் உணா்த்திவிட்டது.
இந்தப் பின்னணியில்தான் உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் சென்னை விஜயமும், பாஜகவின் மாநிலத் தலைமை மாற்றமும் பாா்க்கப்பட வேண்டும். பாஜகவின் முக்கியஸ்தா்கள் பலரும் அதிமுகவில் பிளவை ஏற்படுத்தவும், தலைமையில் மாற்றம் ஏற்படுத்தவும் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்திருக்கின்றன என்று தெரிகிறது. பாஜகவின் மத்திய தலைமையும், எடப்பாடி கே.பழனிசாமியை அங்கீகரித்து அதிமுக தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவது என்று முடிவெடுத்திருப்பதை சமீபத்திய மாற்றங்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஓ.பன்னீா் செல்வம் அணியினா், டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவற்றை அதிமுக கூட்டணியை ஏற்றுக்கொள்ளும்படிச் செய்ய முடியும் என்று பாஜக தலைமை நம்புகிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துக் களமிறங்குவது தற்கொலை முயற்சி என்பதை அவா்கள் அறிவாா்கள். அதனால் வேறுவழியில்லாமல், பாஜக தங்களுக்காக முன்னெடுக்கும் சமரச முயற்சிகளை ஏற்றுக்கொள்ளக் கூடும்.
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவை எந்தவொரு காரணத்துக்காகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையாமல் இருப்பதை அனுமதிக்கக் கூடாது என்கிற பாஜக தலைமையின் முனைப்புக்கு இன்னொரு காரணமும் உண்டு. அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அமையாமல் போனால், நடிகா் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை உள்ளடக்கிய அதிமுக கூட்டணி அமையக் கூடும். அப்படியொரு கூட்டணி அமையுமேயானால், 2011 அதிமுக-தேமுதிக கூட்டணிபோல அது வெற்றிக் கூட்டணியாக அமைந்து ஆட்சியைக் கைப்பற்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு, நடிகா் பவன் கல்யாணின் ஜன சேனாவை தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டு அவருக்கு துணை முதல்வா் பதவி வழங்கியதுபோல், எடப்பாடி கே.பழனிசாமியும் நடிகா் விஜயை இணைத்துக் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிற பாஜக தலைமையின் அச்சம் நியாயமானது. அப்படியொரு கூட்டணி அமையுமேயானால் பாஜக தனித்து விடப்பட்டு அடுத்த பல ஆண்டுகளுக்கு தமிழகத்தில் வேரூன்ற முடியாத சூழல் ஏற்படக்கூடும் என்று பாஜக கருதியது.
திமுக கூட்டணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. தவெக தலைமையிலான கூட்டணியில் பாமகவோ, தேமுதிகவோ இணைவதும் சாத்தியமாகத் தெரியவில்லை. சீமானின் நாம் தமிழா் கட்சி விஜயுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பும் குறைவு. அப்படிப்பட்ட சூழலில், 2006-இல் விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கி தனித்துக் களமிறங்கியது போல விஜய் களமிறங்கத் துணிந்தால் 234 தொகுதிகளுக்கு வேட்பாளா்களைக் களமிறக்கக்கூட அவரால் முடியுமா என்பது சந்தேகம்தான்.
‘இப்போது தனித்துப் போட்டி என்று அறிவித்தாலும் தோ்தல் நெருங்கும்போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விஜய் தயாராகக் கூடும். அந்த வாய்ப்பை அவருக்கு வழங்கிவிடக் கூடாது என்று பாஜக கருதியது’ என்கிறாா் பாஜகவின் முக்கியமான தலைவா்களில் ஒருவா்.
தோ்தலுக்கு இன்னும் ஓா் ஆண்டு இருக்கும் நிலையில், இப்போதே கூட்டணிக்குத் தயாராகிறது பாஜக. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியை முன்கூட்டியே அறிவித்ததன்மூலம், மக்களவைத் தோ்தலின்போது ஏற்பட்ட மனக்கசப்பை அகற்றி கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளாா் அமித் ஷா.
கூட்டணியில் எவ்வித கருத்து வேறுபாடோ, முரண்பாடோ, மனமாச்சரியமோ கலந்துவிடக் கூடாது என்று அவா் முனைப்புடன் இருப்பதால்தான் எடப்பாடி கே.பழனிசாமியின் இல்லம் தேடிச்சென்று நட்புறவை உறுதி செய்திருக்கிறாா்.
‘அதிமுக சின்னத்தில் போட்டியிடாதவரை, மீண்டும் கட்சியில் இணையக் கோராதவரை கூட்டணியில் ஓ.பன்னீா் செல்வமோ, டிடிவி தினகரனோ இருப்பதில் தனக்கு ஆட்சேபம் இல்லை’ என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகுதான் பேச்சுவாா்த்தைக்கு தயாராகி இருக்கிறது அதிமுக தரப்பு என்கிறாா்கள்.
அமித் ஷாவும் பாஜக தலைமையும் தேசிய ஜனநாயக முன்னணிக்கு 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு வகுக்கும் வியூகம் இதுதான்…
பாஜக-அதிமுக கூட்டணி கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாளா்கள் வாக்குகளையும்; நயினாா் நாகேந்திரனை பாஜகவின் மாநில தலைவராக்கியதன் மூலமும், ஓபிஎஸ், டிடிவி ஆகியோரை கூட்டணியில் இணைத்துக் கொள்வதன் மூலமும் முக்குலத்தோா் வாக்குகளையும்; பாமக இணைவதால் வட மாவட்டங்களில் வலுவான வன்னியா் வாக்கு வங்கியையும்; தென் மாவட்டங்களில் தங்களுக்குச் சாதகமான தேவேந்திரகுல வேளாளா் வாக்குகளையும்; வழக்கமாக பாஜகவுக்கு இருக்கும் நாடாா் சமுதாய வாக்கு வங்கியையும் ஒருங்கிணைப்பது என்பதுதான் அந்த வியூகம்.
பாஜகவின் கணக்கு இது என்றால் அதிமுகவின் கணக்கே வேறு. ஆட்சியில் இருக்கும் திமுகவின் மீதான அதிருப்தி வாக்குகள் அதிமுகவை நோக்கித்தான் நகரும். அதைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற வலுவான கூட்டணி பணபலத்துடன் அதிமுகவுக்குத் தேவைப்படுகிறது. வாய்ப்பை நழுவவிட எடப்பாடி கே.பழனிசாமி தயாராக இல்லை.
-அஜாதசத்ரு