ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரின் வருகைக்கு பின்பு ராமர் கோயிலில் கங்கை நீர் ஊற்றி கழுவப்பட்ட விவகாரத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான திக்காராம் ஜுல்லி கடந்த ஏப்.7 ஆம் தேதி ராம நவமியை முன்னிட்டு அல்வாரிலுள்ள ராமர் கோயிலில் வழிபாடு செய்துள்ளார்.
திக்கா ராம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் வழிபாடு செய்து முடித்த பின்னர் பாஜக நிர்வாகிகள் அந்தக் கோயிலைக் கழுவி சுத்தம் செய்தததுடன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ஞானதேவ் அஹுஜா என்பவர் கங்கை நீர் தெளித்து மீண்டும் புனிதப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:
’’பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நபர் கோயிலினுள் நுழைய அனுமதி வழங்கப்படுவதில்லை. அப்படி அவர் அனுமதிக்கப்பட்டால் அந்தக் கோயில் தண்ணீர் ஊற்றி கழுவப்படுகிறது. இது நமது மதமில்லை; நாம் நம்மை இந்துக்கள் எனக் கூறிக்கொள்கிறோம்; ஆனால், நமது மதத்தில் எல்லா மனிதர்களும் மரியாதையோடு நடத்தப்படுவார்கள். பாஜக பின்பற்றுவது நமது மதமில்லை, இது அவர்களது தலைவர்களின் மனதில் ஒளிந்துள்ள தீண்டாமையின் விளைவு’’ என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.