புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தார்.
செளத் பிளாக்கில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழகத்துக்கான நிதிகளை விடுவிக்கக் கோரி மனு அளித்தார்.
இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக சென்னையில் இருந்து தில்லிக்கு விமானத்தில் வியாழக்கிழமை இரவு சென்ற முதல்வரை திமுக எம்பிக்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக காவல் படையினர் மரியாதை செலுத்தினர்.
3 முக்கிய கோரிக்கைகள்
தில்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு இன்று காலை நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
தமிழகத்துக்கு சமக்ரா சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிப்பது, சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத் திட்டப் பணிகளுக்கான நிதியை உடனே வழங்குவது, இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வா் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு!
பிரதமருடனான சந்திப்பைத் தொடா்ந்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் மறைந்த சீதாரம் யெச்சூரியின் இல்லத்துக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வா் ஆறுதல் தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, இன்று மாலை 5.30 மணிக்கு தில்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் திரும்புகிறாா்.