பொங்கல் விடு​முறையை கொண்டாட சிறப்பு பேருந்​து சேவை தொடக்கம்: ஒரே நாளில் 1.50 லட்சம் பேர் பயணம் | Special bus service for celebrate Pongal holidays

1346603.jpg
Spread the love

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பு பேருந்துகளின் சேவை நேற்று முதல் தொடங்கியது. ஒரேநாளில் 1.50 லட்சம் பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து வெவ்வேறு ஊர்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 1,560 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சென்னையைப் பொருத்தவரை 3 இடங்களில் இருந்து 1,445 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி காலை முதலே நிலையத்துக்கு எடுத்து பேருந்துகள் வரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பயணிப்பதற்காக மாலை முதல் பேருந்து நிலையங்களை நோக்கி பொதுமக்கள் வரத் தொடங்கினர். இதற்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 320 இணைப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

போக்குவரத்து நெரிசல்: மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோருடன், ஊர்களுக்குச் செல்வோரும் சேர்ந்ததால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அதன்படி ஜிஎஸ்டி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நெரிசல் காணப்பட்டது. இதைக் கடந்து பேருந்து நிலையங்களை அடைந்தவர்களுக்கு கூடுதல் முன்பதிவு மையங்கள், உதவி மையங்கள், தானியங்கி பயணச்சீட்டு மையங்கள் போன்றவை போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதைப் பயன்படுத்தி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக பயணித்தனர். கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர்- செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிசுற்று சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையே, ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இது தொடர்பாக உரிமையாளர்கள் கூறும்போது, “அரசின் ஒப்புதலுடன் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்துக்கு அதிகமாக வசூலிக்கப்படுவதில்லை. கூடுதல் கட்டணம் தொடர்பாக 90433 79664 என்ற எண்ணை அணுகலாம்” என்றனர்.

உதவி எண்கள்: பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, “நேற்றைய தினம் சென்னையில் இருந்து 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் விவரங்களுக்கும், புகார்களுக்கும் 94450 14436 என்ற எண்ணையும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (கட்டணமில்லா எண்) மற்றும் 044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களையும் அணுகலாம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *