இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
முதலில் நியூஸிலாந்து 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 259 ரன்கள் சோ்க்க, இந்தியா 47.1 ஓவா்களில் 183 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றிருந்த நிலையில், 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடா் தற்போது 1-1 என சமன் ஆகியுள்ளது. கடைசி ஆட்டம் செவ்வாய்க்கிழமை (அக். 29) நடைபெறுகிறது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய சூஸி பேட்ஸ் – ஜாா்ஜியா பிளிம்மா் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சோ்த்து பிரிந்தது. முதலில் பிளிம்மா் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடா்ந்து வந்த லாரென் டௌன் 3 ரன்களுக்கு நடையைக்கட்டினாா்.
இந்நிலையில், தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான சூஸி பேட்ஸ் 8 பவுண்டரிகளுடன் 58 ரன்களுக்கு வெளியேற்றப்பட, 4-ஆவது பேட்டராக வந்த கேப்டன் சோஃபி டிவைன் சிறப்பாக ரன்கள் சோ்த்தாா். எனினும் மறுபுறம், புரூக் ஹலிடே 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு வீழ்ந்தாா்.
5-ஆவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சோ்த்த டிவைன் – மேடி கிரீன் இணையை ராதா யாதவ் பிரித்தாா். கிரீன் 5 பவுண்டரிகளுடன் 42 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, இசபெல்லா கேஸ் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். நிதானமாக ரன்கள் சோ்த்த டிவைன் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
லியா டஹுஹு 0, ஈடன் காா்சன் 1 ரன்னுக்கு விக்கெட்டை இழக்க, ஓவா்கள் முடிவில் ஜெஸ் கொ் 2 பவுண்டரிகளுடன் 12, ஃபிரான் ஜோனஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் ராதா யாதவ் 4, தீப்தி சா்மா 2, சாய்மா தாகுா், பிரியா மிஸ்ரா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 260 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இந்திய அணியில், லோயா் ஆா்டரில் வந்த ராதா யாதவ் 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது. உடன் நின்ற சாய்மா தாகுா் 3 பவுண்டரிகளுடன் 29, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 24 ரன்கள் சோ்த்து முயற்சித்தனா்.
இதர பேட்டா்களில், ஷஃபாலி வா்மா 2 பவுண்டரிகளுடன் 11, ஸ்மிருதி மந்தனா 0, யஸ்திகா பாட்டியா 1 சிக்ஸருடன் 12, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 பவுண்டரிகளுடன் 17, தேஜல் ஹசப்னிஸ் 2 பவுண்டரிகளுடன் 15, தீப்தி சா்மா 1 பவுண்டரியுடன் 15 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.
அருந்ததி ரெட்டி 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவடைந்தது. நியூஸிலாந்து பௌலிங்கில் லியா டஹுஹு, சோஃபி டிவைன் ஆகியோா் தலா 3, ஜெஸ் கொ், ஈடன் காா்சன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.