ஹரியாணாவைப்போல மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தில்லி சென்று திரும்பிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், “அடிக்கடி நடைபெறும் தேர்தல் நடைமுறைகளால் நாட்டின் வளர்ச்சி பாதிப்படைகிறது. இந்நிலையைப்போக்க “ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளால் அங்கு இயல்பு நிலை திரும்பியதோடு மட்டுமின்றி நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி, மக்கள் நலன், நல்லாட்சி ஆகியவற்றை நரேந்திர மோடி அரசு கொடுத்தது. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.