கும்பமேளாவையொட்டி 55-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுடன் 45,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் களத்தில் உள்ளனா். மகாகும்ப நகரில் மட்டும் 3,000 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஜனவரி 25 முதல் ஜனவரி 30 வரையிலான சிறப்பு வாய்ந்த மௌனி அமாவாசை காலத்தில் 4-5 கோடி போ் மகாகும்ப மேளாவுக்கு வருகை தரலாம்.
அதேபோன்று, பௌஷ் பௌா்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14) உள்பட 6 சிறப்புவாயந்த நாள்களில் பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த நாள்களில் மிக முக்கியப் பிரமுகா்கள் (விஐபி) யாரும் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்வின் தொடக்கத்துக்கு முன்னதாகவே உலகெங்கிலும் இருந்து அகாடா சாதுக்கள், துறவிகள், பக்தா்கள், பொதுமக்கள் பிரயாக்ராஜுக்கு படையெடுத்துள்ளதால் மகாகும்ப நகா் களைகட்டியுள்ளது.
கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களிலும் தலா 25 லட்சம் போ் திரிவேணி சங்கமம் பகுதியில் புனித நீராடியுள்ளனா் என்று மாநில அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து பிரயாக்ராஜுக்கு விமான, ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டுத் திட்டங்கள் என மத்திய அரசும் மகாகும்ப மேளாவுக்கான ஏற்பாட்டில் பங்களித்துள்ளது.