மணலியில் பயோகாஸ் உற்பத்தி ஆலையில் விபத்து: கட்டிடம் இடிந்து ஒருவர் உயிரிழப்பு | Fire Accident at biogas production plant in Manali

1351137.jpg
Spread the love

பொன்னேரி: மணலியில் மாநகராட்சி பயோகாஸ் உற்பத்தி தொழிற்சாலையில் வாயு அழுத்தத்தால் இயந்திரம் வெடித்துச் சிதறியதில் கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயமடைந்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட 22-வது வார்டு பகுதியான மணலி பல்ஜிபாளையம், வழுதலைமேடு சாலையில் சென்னை மாநகராட்சியின் பயோகாஸ் (Bio Gas) உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தனியார் ஒப்பந்த நிறுவனம் நடத்திவரும் இந்த ஆலையில், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய 5 மண்டலங்களில் சேகரிக்கப்படும் காய்கறி மற்றும் உணவுக் கழிவுகளிலிருந்து காஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆலையின் கட்டுப்பாட்டு அறையில் நேற்று முன்தினம் இரவு, கட்டுப்பாட்டு அறை ஆபரேட்டரான, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார்(30) மற்றும் பொன்னேரி அருகே புலிக்குளம் பகுதியைச் சேர்ந்த, லாரி ஓட்டுநரான பாஸ்கர்(35) ஆகியோர் பணியில் இருந்தனர். அவர்கள் இரவு 10 மணியளவில் பணியை முடித்துவிட்டு, வீட்டுக்கு புறப்படத் தயாராகினர். எனவே, சரவணகுமார், கட்டுப்பாட்டு அறையில் உள்ள இயந்திர வால்வை மூட முயன்றார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக வாயு அழுத்தம் மற்றும் மின்கசிவு காரணமாக கட்டுப்பாட்டு அறை இயந்திரம் வெடித்துச் சிதறியது. இதனால், கட்டுப்பாட்டு அறை கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் சுவர் இடிந்து, சரவணகுமார், பாஸ்கர் ஆகியோர் மீது விழுந்தது.

2 மணி நேர போராட்டம்: தகவலறிந்த மணலி போலீஸார், தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி கட்டிட இடிபாடுகளில் சிக்கியதில் சரவணகுமாரை சடலமாகவும், பாஸ்கரை படுகாயங்களுடனும் மீட்டனர். பாஸ்கர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சரவணகுமார் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மணலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடம் விரைந்த ஆவடி காவல் ஆணையரக உயரதிகாரிகள் மற்றும் திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, காஸ் உற்பத்தி ஆலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *