சென்னை: “தமிழகத்தில் ஆளுநர் எதிர்பார்க்கும் எந்த நிகழ்வும் நடைபெறாது. இங்கு மட்டும் மதுவை ஒழியுங்கள் என்றால் முடியாது. கள்ளச்சாராயம் பெருகிவிடும். இந்தியா முழுவதும் ஒழிக்கப்பட வேண்டும்” என்று சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியது: “ஆளுநர் ஆன்லைன் ரம்மியின் தூதுவராக, நீட் தேர்வுகளுக்கான பிஆர்ஓ போல செயல்பட்டு வருகிறார். காந்தி மண்டப வளாகத்தில் மதுபாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளது மிகுந்த வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். ஆளுநருடன் கேமராமேன் சென்றுள்ளார். அப்போது பாட்டில் இருந்துள்ளது. சென்னை மாநகரில் இரவு நேரங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடங்களில் பகல் நேரங்களில் தொழிலாளர்கள் சுத்தம் செய்கின்றனர். சுத்தத்துக்கு நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம்.
மதுபாட்டில் காந்தி மண்டபத்தில் கிடந்ததாக மன உளைச்சலை ஆளுநர் கூறியுள்ளார். சூதாட்டத்தையும் காந்தி தடுத்தார். ஆனால், பலவித சூதாட்டங்கள் நடைபெறத்தான் செய்கின்றன. தமிழக முதல்வரின் அரசு மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு. ஆனால், மதுவை தமிழகம் மட்டும் ஒழிக்க இயலாது. அனைத்து மாநிலங்களும் சேர்ந்தால்தான் ஒழிக்க முடியும். மத்திய அரசு கையில் எடுக்க வேண்டும். தமிழக அரசால் முடியாது.
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு அதிகளவில் முன்னுரிமை கொடுக்கப்படும். தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட கிடையாது. ஆனால், பக்கத்து மாநிலங்களில் இருப்பதால், இந்தியா முழுவதற்கும் கொள்கை கொண்டுவந்தால் ஒழிக்க முடியும். தமிழகத்தில் மட்டும் மதுவை ஒழியுங்கள் என்றால் முடியாது.
‘எண்ணித்துணிக’ என்ற தலைப்பில் ராஜ்பவனில் ஆளுநர் கதாகாலட்சேபம் நடத்தி, அறிவியலுக்கு முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அது தமிழகத்தில் எடுபடாது. இது திராவிட பூமி. இங்குள்ளவர்களின் எண்ணங்கள் ஒரே மாதிரியானது தான். எனவே, அவர் எதிர்பார்க்கும் எதுவும் தமிழகத்தில் நடைபெறாது” என்று அவர் தெரிவித்தார்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மதுவிலக்கு தொடர்பாக போராட்டம் நடத்திய நிலையில், தற்போது ஆட்சியில் இருக்கும்போது செயல்படுத்தாதது ஏன் என்று கேட்டதற்கு, “தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, கேரளாவில் இருப்பதால், தமிழகத்தில் மட்டும் கொண்டுவருவது சாத்தியமில்லை. நாங்கள் மதுவிலக்கை கொண்டுவர தயார். எல்லோரும், மத்திய அரசும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மட்டும் கொண்டுவந்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும். அதைத் தடுக்கும் பணியைத்தான் செய்ய முடியுமே தவிர, மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்த முடியாது. எனவே, இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டுவரப்பட வேண்டும். எதிர்காலத்தில் இண்டியா கூட்டணி ஆட்சி அமையும்போது, அனைத்து மாநில அரசுகளும் மதுவிலக்கை கொண்டுவர முதல்வர் முயற்சிப்பார்” என்றார்.
தமிழகத்தில், பட்டியலினத்தவர் மீது தாக்குதல் அதிகரித்துள்ளதாக ஆளுநர் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, “குற்றப் பதிவு புள்ளிவிவரங்கள் சாதி அடிப்படையில் அவர்களுக்கு கிடைத்திருக்கலாம். ஆனால், பட்டியலினத்தவர் என்பதால் தாக்கப்பட்டதாக எந்த தகவல் இல்லை” என்றார்.
ஆளுநர் தொடர்ச்சியாகவே அரசை விமர்சிக்கிறாரே? அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்களா என்றதற்கு, “ஆளுநர் ஆளுநருக்கான வேலையை பார்க்க வேண்டும். மாநில அரசுக்கும்,மத்திய அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும். ஆனால், இங்கிருந்துகொண்டு அரசியல் செய்கிறார். அதனால்தான் இங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அவர் பதவி விலக வேண்டும் என்பதற்காக சொல்லப்படுவதுதான்” என்று அவர் தெரிவித்தார்.