மத்திய அரசு தடை செய்த 156 மருந்துகளை தமிழகத்தில் விற்றால் நடவடிக்கை: மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரிக்கை | Action if 156 banned drugs are sold in Tamil Nadu

1301727.jpg
Spread the love

சென்னை: மத்திய அரசு தடை செய்துள்ள 156 மருந்துகளை தமிழகத்தில் யாராவது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது.

ஃபிக்ஸ்ட் டோஸ் காம்பினேசன் (எஃப்டிசி) எனப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூல மருந்துகளின் கலவையை உள்ளடக்கிய பல்லாயிரக்கணக்கான கூட்டு மருந்துகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றின் செயல் திறன், எதிர்விளைவுகள் உள்ளிட்டவற்றை மத்திய நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது.

சளி, இருமல், சத்து மாத்திரைகள், இதயம், கல்லீரல் நலனுக்கான வைட்டமின் மருந்துகள், ஒவ்வாமை பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் என மொத்தம் 156 கூட்டு மருந்துகளால் எதிர்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி சில தினங்களுக்கு முன்பு, அந்த மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பல்வேறு மாநில மருந்து உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றங்களை நாடி வருகின்றனர்.

இதற்கிடையில், மத்திய அரசு தடை செய்துள்ள மருந்துகளை தமிழகத்தில் எந்த மருந்து கடைகளிலும் விற்பனை செய்யக்கூடாது என்று மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இணை இயக்குநர் (உரிமம் வழங்குதல் மற்றும் அதிகார கட்டுப்பாட்டாளர்) எம்.என்.ஸ்ரீதரிடம் கேட்ட போது, “மத்திய அரசு தடை செய்துள்ள 156 மருந்துகளை ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் யாரும் விற்பனை செய்யக்கூடாது. ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அந்த மருந்துகள் இருந்தால், அதனை திருப்பி அனுப்ப வேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்ட உற்பதியாளர்களுக்கு அனுப்பிவிடுவார்கள். பின்னர், அந்த மருந்துகள் அழிக்கப்படும். அந்த மருந்துகளை யாராவது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *