மளிகை பொருட்கள் அடங்கிய 3 வகை பொங்கல் தொகுப்புகள் விற்பனை செய்ய தமிழக அரசு திட்டம் | 3 types of Pongal packages including groceries on sale

1343236.jpg
Spread the love

கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் மளிகை பொருட்கள் அடங்கிய 3 வகையான பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.

அரசு கூட்டுறவுத்துறை சார்பில் பண்டிகை காலங்களில், பண்டிகைக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. விலை மலிவாகவும், பொருட்கள் தரமாகவும் இருப்பதால், இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘கூட்டுறவு பொங்கல்’ என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த தொகுப்புகளில் பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற உள்ளன.

இதுகுறித்து அனைத்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன் அனுப்பியுள்ள செயல்முறை ஆணையில் கூறியிருப்பதாவது: அடுத்த மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ‘கூட்டுறவு பொங்கல் தொகுப்பு’ என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. அவற்றை நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், சுயசேவை பிரிவுகள், நியாயவிலைக் கடைகளில் விற்க வேண்டும்.

ரூ.199 முதல் 999 வரை: இதில் ரூ.199-க்கு ‘இனிப்பு பொங்கல் தொகுப்பு’ (8 பொருட்கள்), ரூ.499-க்கு ‘சிறப்பு கூட்டுறவு பொங்கல் தொகுப்பு’ (20 பொருட்கள்), ரூ.999-க்கு ‘பெரும் பொங்கல் தொகுப்பு’ (35 பொருட்கள்) ஆகிய 3 வகைகளில் பொங்கல் தொகுப்புகள் விற்கப்பட உள்ளன. இத்தொகுப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *