மழை, வெயிலில் தவித்த மலைவாழ் மக்களுக்கு 10 வீடுகள் – மதுரை ஆட்சியரின் முன்னெடுப்பு | Madurai Collector who built 10 houses for Tribal People

1304891.jpg
Spread the love

மதுரை: மதுரை அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் வீடுகள் இல்லாமல் மழையிலும், வெயிலிலும் குழந்தைகளுடன் சிரமப்பட்டு வந்த மலைவாழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் தலா ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய 10 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மொக்கத்தான்பாறை கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்கள் மலைகளில் தேன், கிழங்கு, மூலிகைப்பொருட்களை சேகரித்து விற்பனை செய்கின்றனர். வாழ்வாதாரத்துக்காக இவர்களுடன் அவர்களது குழந்தைகளும் வேலைக்கு செல்வதால் அவர்களுடைய கல்வி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்சியர் சங்கீதா, சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் வழக்கமான ஆய்வுக்கு சென்ற ஆட்சியர் சங்கீதா, மதுரைக்கு திரும்பி வரும்வழியில் அருகில் உள்ள மொக்கத்தான் பாறை கிராமத்துக்கு சென்றுள்ளார்.

இக்கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வீடுகள் கூட சரியாக இல்லாமல் பாதிக்கப்பட்டிருப்பதும், குழந்தைகள் பள்ளிக்கு செல்லாததும் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்பகுதி மக்களிடம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டார். அப்போது அவர்கள், தங்கள் வீடுகள் பாழடைந்து வசிக்க முடியவில்லை என்றும், மழைக்காலத்தில் வீட்டுக்குள் இருக்க முடியாமல் குழந்தைகளுடன் மிகுந்த சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்ட ஆட்சியர், அக்கிராமத்தில் முதற்கட்டமாக தலா ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய 10 புதிய வீடுகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தார். அப்பகுதி ஊராட்சி ஒன்றியம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்போடு இப்பணிகளை ஆட்சியர் ஒருங்கிணைத்தார்.

தற்போது இந்த வீடுகளுடைய கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவுபெற்ற நிலையில் விரைவில் திறப்பு விழா நடக்க உள்ளது. விழாவில் பயனாளிகளுக்கு வீடுகளை ஆட்சியர் வழங்க உள்ளார். மலைக்கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கான்கிரீட் வீடு கிடைக்க இருப்பதோடு தங்கள் குழந்தைகள் படிக்கவும் ஏற்பாடு செய்த ஆட்சியருக்கு அந்த மக்கள் நன்றி தெரிவித்துள்ள இச்சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *