மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்துக்கு நிதி கிடையாதா? – மத்திய அமைச்சருக்கு முதல்வர், தலைவர்கள் கண்டனம் | Leaders condemn Union Minister

1351107.jpg
Spread the love

மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது என மிரட்டும் விதமாக பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

‘தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுப்பதால் எஸ்எஸ்ஏ நிதியை தமிழகத்துக்கு ஒதுக்க முடியாது’ என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: மும்மொழிக் கொள்கையை சட்ட விதிமுறைகள் என்கிறார் மத்திய அமைச்சர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்குகிறது என்பதை கல்வி அமைச்சரால் கூற முடியுமா, மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி. இதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல. ‘மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது’ என்று மிரட்டல் செய்யும் தடித்தனத்தை தமிழர்கள் பொறுக்க மாட்டார்கள். எனவே எங்களது உரிமையை கேட்கிறோம். அவரது தனிச்சொத்தை கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழகத்தை மிரட்டுகிறார்கள். தமிழகத்தை சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். இதற்கு சுதந்திரத்துக்கு பிறகான தமிழகத்தின் வரலாற்றை படித்தாலே புரியும். தலைக்கனம் காட்ட வேண்டாம்.

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி: மத்திய அமைச்சர் பேசுவது வெளிப்படையான மிரட்டல். தமிழக மாணவர்களின் கல்வியோடு விளையாடுவது தான் பாஜகவின் அரசியலா, தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் செயல்களை பாஜக அரசு நிறுத்தாவிட்டால் தமிழ் மக்களின் போராட்ட குணத்துக்கு பதில் சொல்ல நேரிடும்‌.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. பாஜக, திமுக கட்சிகளின் அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது தமிழக மாணவர்கள்தான். மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதியை தடைபடுத்தக் கூடாது.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: புதிய கல்விக்கொள்கையை ஏற்காத ஒரே காரணத்துக்காக தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை மத்திய அரசு அபகரிப்பது என்பது கூட்டாட்சி தத்துவத்தை உதாசீனப்படுத்தும் செயலாகும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டத்தை மத்திய அரசு திணிப்பதாலே தமிழக அரசு அதை கடுமையாக எதிர்க்கிறது. மாநில அரசுகளின் உரிமையை நசுக்க நினைப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது.

விசிக தலைவர் திருமாவளவன்: தேசியக் கல்விக் கொள்கையை காரணம் காட்டி தமிழகத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவது மிரட்டல் நடவடிக்கையாகும். இந்த போக்கை மத்திய அரசு கைவிடாவிட்டால் தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.

பாமக தலைவர் அன்புமணி: தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு மதிக்க வேண்டும்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: தமிழகத்தில் மும்மொழி கல்வியை மத்திய அரசு கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. இவ்விவகாரத்தில் மாற்றான் போக்கு எண்ணத்தோடு மத்திய அரசு செயல்படுவது மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும்.

தவெக தலைவர் விஜய்: மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன. மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்துக்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச அணுகுமுறையாகும்.

ஆதரவு நிலைப்பாடு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: முதல்வர் உட்பட தமிழக அமைச்சர்களின் மகன், மகள், பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில் மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். ஆனால் தமிழக அரசு பள்ளிகளில் மூன்றாவது ஒரு மொழியை கற்பிக்கக் கூடாதா, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும் 1960-ல் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமல்ல.

முன்னாள் ஆளுநர் தமிழிசை: புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்வியை தான் ஊக்குவிக்கிறது. தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள் மும்மொழி கல்வியை பின்பற்றும் நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் ஏன் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொள்ளக் கூடாதா. இதற்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *