மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை வாகன நிறுத்தங்களில் விரைவில் வருகிறது ஃபாஸ்ட் டேக் கட்டண வசூல்! | fast tag parking fee in marina and besant nagar beaches

1345390.jpg
Spread the love

சென்னை மாநகராட்சி ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. இதனிடையே மூலதன பணி மேற்கொள்ள பெறப்பட்ட கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி கடந்த நிதியாண்டில் ரூ.111 கோடிக்கு மேல் உயர்ந்தது. இந்நிலையில் மாநகராட்சியின் வருவாயை எந்தெந்த இனங்களில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என ஆய்வு செய்து, விரைந்து செயல்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சொத்து வரியை யாரேனும் குறைவாக காட்டி இருந்தால், ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து, சரியான வரியை நிர்ணயித்து வசூலிக்கவும், அனைத்து கடைக்காரர்களிடமும், நிறுவன பணியாளர்களிடமும் தொழில்வரி வசூலிப்பதை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் சொத்து வரி நடப்பாண்டில் ரூ.1,750 கோடி வரையும், தொழில் வரி ரூ.550 கோடி வரையும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரையில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணி மாநகராட்சி சார்பில், வருவாய் பங்கீடு அடிப்படையில் தனியாருக்கு விடப்பட்டது. தனியார் நிறுவன ஊழியர்களும், உள்ளூர் செல்வாக்கு மிக்கவர்களும் அவர்களின் விருப்பம்போல் வாகன நிறுத்தவசூலை அள்ளி குவித்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் கேட்கும் கட்டணத்தை கொடுக்காத வாகன ஓட்டுநர்களை தாக்கும் அளவுக்கு அவர்களின் அட்டகாசம் உச்சத்துக்கு சென்றது.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில், மெரினாவில் வாகன நிறுத்த கட்டண வசூல் சேவை, முன்னாள் படைவீரர்களைக் கொண்டு இயங்கும் அரசு சார்பு நிறுவனமான டெக்ஸ்கோவிடம் (TEXCO ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணமாக வசூலிக்க கூடாது.

பணமில்லா பரிவர்த்தனை முறையில் பிஓஎஸ் இயந்திரம் மூலமாக மட்டுமே கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட துறையினரும், அரசியல் வாதிகளும், அவர்களுக்கு வேண்டியவர்களும் வாகன நிறுத்த கட்டணம் செலுத்தாமல் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் மாநகராட்சி பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதற்கிடையில் மாநகராட்சி வருவாயை அதிகரிக்கவும், சென்னை மெரினா மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் வாகன நிறுத்த கட்டண வசூலில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், கட்டணம் செலுத்தாமல் இருப்பதை தடுக்கவும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்மார்ட் வாகன நிறுத்த முறையை அமல்படுத்துமாறு மாநகராட்சி வருவாய்த்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி துணை ஆணையர் ம.பிரதிவிராஜ் தலைமையில் மாநகர வருவாய் அலுவலர், சிறப்பு திட்டத்துறை கண்காணிப்பு பொறியாளர், தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டல அலுவலர்கள், சேவை வழங்கும் நிறுவனங்களுடன் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடைபெற்றது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இந்த கூட்டத்தில், எதை நுழைவு வழியாகவும், எதை வெளியேறும் வழியாகவும் அமைப்பது, கிடைக்கும் வருவாயில் சேவை வழங்கும் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இடையிலான பங்கீட்டு அளவு, கட்டண வசூலில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் குறிப்பாக ஃபாஸ்ட் டேக் முறையை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதை கொண்டு வந்தால், டோல் பிளாசா போல, மெரினா அல்லது பெசன்ட்நகர் கடற்கரை வாகன நிறுத்த பகுதிக்குள் கார் வந்தாலே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். மேலும் நவீன சென்சார்கள் மூலம் எங்கெங்கு வாகன நிறுத்த இடங்கள் காலியாக உள்ளது என செயலி மூலமாக வாகன ஓட்டிகளே பார்த்து தெரிந்துகொள்ளும் வசதியை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தற்போது மெரினாவில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5, நான்கு சக்கரவாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு வார நாட்களில் சுமார் ரூ.6 ஆயிரம், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் வாகன நிறுத்த கட்டணம் வசூலாகிறது. நவீன முறையை கொண்டு வந்தால், இந்த வருவாய் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *