மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பல இடங்கள் அபாயகரமான நிலையில் உள்ளன. இந்த இயற்கைப் பேரிடரை சமாளிக்க மத்திய அரசு எந்த உதவியும் தற்போது வரை செய்யவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
”வடக்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. கூச் பெஹர், ஜல்பைகுரி மற்றும் அலிபுர்துவார் மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்யும் கனமழையால் கோசி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், பிகாரிலும், மேற்கு வங்கத்தின் தக்ஷின் தினஜ்பூர் மற்றும் மால்டா மாவட்டங்களிலும் வரும் நாள்களில் பாதிப்புகள் மோசமடையக் கூடும்.
இந்தப் பேரிடரைச் சமாளிக்க மத்திய அரசு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. இங்குள்ள ஃபராக்கா தடுப்பணையின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள பலமுறை நினைவூட்டியும் அது நடத்தப்படவில்லை. அதன் நீர் தாங்கும் திறன் வெகுவாகக் குறைந்துள்ளது” என்று கூறினார்.