‘யாகாவாராயினும் நாகாக்க..’ – கம்யூனிசம் குறித்த ஆ.ராசா பேச்சுக்கு முத்தரசன் கண்டனம் | CPI State Secretary Mutharasan condemns A.Raja over his remarks against Communism

1346249.jpg
Spread the love

சென்னை: ‘சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது’ என்று ஆ.ராசா எம்பி பேசியதை கண்டித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “திமுக துணைப் பொதுச் செயலாளர் என்ற தலைமைப் பொறுப்பில் இருந்து வரும் ஆ.ராசா, இப்படி பொறுப்பற்ற முறையில் பேசி வருவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். யாகாவாராயினும் நாகாக்க” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் நேற்று (07.01.2025) நடந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா “கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கொள்கை தோற்றுப் போய் விட்டது” என்ற அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார். கம்யூனிஸ்டு தத்துவத்தின் மீது தலைவர்கள் வைக்கும் நம்பிக்கை குறைந்து விட்டது என்ற அவதூறுச் செய்தியை ஆதாரமாக காட்டுகிறார்.

கடந்த 1989-90 ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்டு ஆட்சி வீழ்ந்ததும், இதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றங்களும் உலகளாவிய முக்கிய நிகழ்வுகளாகும். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும், இதர கம்யூனிஸ்டு கட்சிகளும் விரிவான ஆய்வு செய்து, அதற்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக வெளியிட்டுள்ளன. இவைகளை ஆ.ராசா சார்பு நிலை தவிர்த்து கற்றறிந்து பேச வேண்டும்.

“கம்யூனிசம் பிறந்த இடத்திலேயே செத்து விட்டது” “முதலாளித்துவத்துக்கு மாற்று இல்லை” என்று தத்துவ எதிரிகள் கொக்கரித்துக் கொண்டிருந்த வேளையில், கருணாநிதி “சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்டது தோல்வி அல்ல; அது தற்காலிக பின்னடைவு மட்டுமே” என்று கூறியதை ஆ.ராசா தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகளின் நேர்மையை, எளிமையை, தன்னல மறுப்பை, பொதுநல வேட்கையை, போராட்ட குணத்தை வர்க்க எதிரிகளும் ஒப்புக் கொள்வதை நாடறியும் என்பதை ஆ.ராசாவும் அறிந்திருக்க வேண்டும். போகிற போக்கில் “கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள்” என்று குற்றம் சாட்டும் ஆ.ராசா, அவர் கண்டறிந்த கம்யூனிஸ்டு சுயநலவாதிகள் பட்டியலை வெளியிட வேண்டும்.

கம்யூனிசம் என்பது வறட்டு தத்துவம் அல்ல, அது மனித குலம் நிறைவாக, நீடித்த அமைதியும், நிரந்தர சமாதானமும் நிலவும் முற்றிலும் புதுமையான சமூக அமைப்பில் வாழும் வாழ்க்கை முறை பற்றிய சமூக விஞ்ஞானம்.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறு தான் மனிதகுல வரலாறாகும். இதில் இயற்கை நிலை சமூகம் படிப்படியாக மாறி இன்று நிதி மூலதனமும், குழும நிறுவனங்களுமாக ஆதிக்கம் செலுத்தும் உச்சபட்ச ஏகாதிபத்திய சமுக அமைப்பாக வளர்ந்து, மீள முடியாத நெருக்கடியில் சிக்கி, சாவில் இருந்து தப்பித்துக் கொள்ள துடிக்கும் நோயாளியாக தவித்து வருகிறது.

சமூக நோயை குணப்படுத்தும் கம்யூனிசம் வெல்லும் எனும் காட்சியை ஆ.ராசாவும் காணும் காலம் வரும்.

உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் பட்டியலின சமூகத்தில் இருந்து தலைவர்களை உருவாக்கி, நாடறிய உயர்த்தி பிடித்த கம்யூனிஸ்டுகள் மீது, இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதி தேடி, தேர்வு செய்யும் நிலையில் இருக்கும் பகுத்தறிவாளர்கள் குற்றம் சாட்டுவது பொறுப்பற்ற செயலாகும். இதில் திமுகழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் என்ற தலைமைப் பொறுப்பில் இருந்து வரும் ஆ.ராசா, இப்படி பொறுப்பற்ற முறையில் பேசி வருவது உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். யாகாவாராயினும் நாகாக்க.” என்று கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும் வாசிக்க>> சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிச கொள்கை தோற்றது: ஆ.ராசா பேச்சால் சர்ச்சை

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *