ரயிலில் கொடூரம்: கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட இளைஞர் கைது – என்ன நடந்தது? | Pregnant woman sexually harassed on train

1350002.jpg
Spread the love

ஜோலார்​பேட்டை / சென்னை: ரயிலில் கர்ப்​பிணிக்கு பாலியல் தொந்​தரவு அளித்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிய இளைஞர் கைது செய்​யப்​பட்​டார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் ஜெமினி (41). இவரது மனைவி ரேவதி (36). தையல் கலைஞர்​களான இவர்​கள், திருப்​பூரில் உள்ள பனியன் நிறு​வனத்​தில் பணிபுரிந்து வருகின்​றனர். மேலும், திருப்​பூரிலேயே வீடு எடுத்து தங்கி​யுள்​ளனர். தற்போது ரேவதி கர்ப்​பிணியாக உள்ளார்.

இந்நிலை​யில், மருத்​துவப் பரிசோதனைக்காக சித்தூர் சென்ற ரேவதி, கோவை​யில் இருந்து ஜோலார்​பேட்டை வழியாக திருப்பதி செல்​லும் இன்டர்​சிட்டி விரைவு ரயிலில் நேற்று முன்​தினம் நள்ளிரவு பயணம் செய்​தார்.

இந்த ரயில் நள்ளிரவு 12.10 மணியள​வில் வேலூர் மாவட்டம் குடி​யாத்​தம்​-கே.​வி.குப்பம் இடையே சென்று கொண்​டிருந்த​போது, ரேவதி கழிப்​பறையை பயன்​படுத்த சென்​றுள்​ளார். அப்போது, கழிப்பறை அருகே அமர்ந்​திருந்த இளைஞர் ஒருவர் ரேவதியை வழிமறித்து, பாலியல் சீண்​டலில் ஈடுபட்​டுள்​ளார். இதனால் ரேவதி கூச்​சலிடவே, சக பயணிகள் அங்கு வந்தனர். இதனால் ஆத்திரமைடந்த அந்த இளைஞர் ஓடும் ரயிலில் இருந்து ரேவதியை கீழே தள்ளி​விட்டு, வேறு பெட்​டிக்கு மாறி தப்பியோடி​னார்.

ரயில் பயணிகள் அளித்த தகவலின்​பேரில் ஜோலார்​பேட்டை ரயில்வே போலீ​ஸார், தண்ட​வாளத்​தில் விழுந்து கிடந்த ரேவதியை மீட்டு, வேலூர் அரசு மருத்​துவக் கல்லூரி மருத்​துவ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். ரேவதிக்கு கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்​டுள்ளதாக தெரி​வித்த டாக்​டர்​கள், அவரை தீவிர சிகிச்​சைப் பிரி​வில் சேர்த்​தனர். இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே காவல் ஆய்வாளர் (பொ) ருவந்​திகா தலைமை​யில் 2 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்டு, விசாரணை நடத்​தப்​பட்​டது. இதில், ரேவதி​யிடம் பாலியல் சீண்​டலில் ஈடுபட்​டவர் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பூஞ்​சோலை கிராமத்​தைச் சேர்ந்த

ஹேமராஜ் (30) என்பது தெரிய​வந்​தது.

இவர், 2022-ல் ஓடும் ரயிலில் பெண் பயணி​யிடம் செல்​போன் பறித்த வழக்​கிலும், 2024-ல் சென்னையைச் சேர்ந்த இளம்​பெண் கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்​டவர் என்பதும், இருமுறை குண்டர் தடுப்புச் சட்டத்​தில் அடைக்​கப்​பட்டு, சமீபத்​தில் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரிய​வந்​தது. ஹேமராஜை கைது செய்தபோலீ​ஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்​றனர்.

மகளிர் ஆணையம் உத்தரவு: இதற்​கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்​யு​மாறு, டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தர​விட்​டுள்​ளது. இது தொடர்பாக ஆணையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை அருகே ஓடும் ரயிலில் கர்ப்​பிணிக்கு பாலியல் தொல்லை அளிக்​கப்​பட்ட கொடூர சம்பவத்​தைக் கண்டிக்​கிறோம். மகளிருக்கான பெட்​டி​யில் பயணித்​த​போதும் அவர் தாக்​கப்​பட்​டிருப்​பது, மாநிலத்​தில் பெண்​களின்

பாது​காப்பு குறித்த கவலையை ஏற்படுத்து​கிறது.

இந்த விவகாரத்தை மகளிர் ஆணையம் தாமாக முன்​வந்து விசா​ரணைக்கு எடுத்​துள்ளது. இது தொடர்பாக தமிழக டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்​தில், “தொடர்​புடைய​வர்களை உடனடியாக கைது செய்ய வேண்​டும். பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்​டும் உள்ளிட்​ட​வற்றை வலியுறுத்​தி​யதுடன், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்​டவை அடங்கிய ​விரிவான அறிக்கையை 3 நாட்​களுக்​குள் சமர்ப்​பிக்​கு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அ​தில் கூறப்​பட்​டுள்​ளது.

தலை​வர்கள் கண்டனம்: ஓடும் ரயிலில் கர்ப்​பிணிக்கு பாலியல் தொல்லை அளிக்​கப்​பட்ட சம்பவத்​துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரி​வித்​துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழகத்தில் பெண்கள் ரயிலில் கூட பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும். கர்ப்பிணி என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை என்னும் அளவுக்கு, நமது சமூகம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பதற்கேற்ப கையாலாகாத ஆட்சியை நடத்திக் கொண்டு, குற்றவாளிகள் திமுகவினராக இருந்தால், அவர்களைக் காப்பாற்ற அரசு எந்திரத்தை எந்த எல்லைக்கும் சென்று பயன்படுத்தும் திமுகவின் வழக்கத்தால், இன்று சமூக விரோதிகளுக்கு, சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பயமில்லாமல் போய்விட்டது. பெண்களுக்குத் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்பது முதல்வருக்கு உறுத்தவில்லையா?

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது நல்லதல்ல. எத்தகைய குற்றங்களைச் செய்தாலும் அதிலிருந்து எளிதாக தப்பி விடலாம் என்ற துணிச்சல் குற்றவாளிகளுக்கு ஏற்பட்டிருப்பதுதான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தடையின்றி கஞ்சா விற்கப்படுவதும் இதற்கு இன்னொரு காரணம். பேருந்து நிலையங்கள், ரயில்கள் ஆகியவற்றில் காவல்துறை பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தில் சமீபகாலமாக சிறுமிகள், மாணவிகள், இளம்பெண்கள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாகி கொண்டே போகின்றன. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க, குற்றச்செயலில் ஈடுபடுவோரை காவல் துறை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் சிறிதளவும் அக்கறையற்ற திமுக அரசால், அரசுப் பள்ளிகள், பொது இடங்கள், பொது போக்குவரத்து என அனைத்து இடங்களிலும் சர்வசாதாரணமாக நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதை கலாச்சாரமும், ஆபாச இணையதளங்களும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குக் காரணமாக உள்ளன.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *