காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ. 1,000 கோடி முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தனியார் நிறுவனத்துடன் புதிய திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (9.4.2025) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டம் நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.