ரைசினா உரையாடல்: நியூசிலாந்து பிரதமர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

Dinamani2f2025 03 142fk7m84uz12ftnieimport20231127originalchristopherluxon.avif.avif
Spread the love

இந்திய அரசின் அழைப்பை ஏற்று ரைசினா உரையாடல் மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்ஸர்வர் ரிசர்ச் பவுண்டேஷனுடன் இணைந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சார்பில் சர்வதேச அளவிலான ரைசினா உரையாடல் – 2025 மாநாடு தலைநகர் புது தில்லியில் வருகின்ற மார்ச் 17 முதல் 19 வரையில் நடைபெறவுள்ளது.

சர்வதேச அளவிலான புவிசார் அரசியல் மற்றும் புவி பொருளாதாரம் குறித்து நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியாவின் அழைப்பை ஏற்று சர்வதேச நாடுகளின் பிரதமர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நியூசிலாந்து நாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பங்கேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து 10வது ரைசினா உரையாடல் மாநாட்டை துவங்கி வைக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த மாநாட்டில் தைவான் நாட்டின் பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: இலங்கை: ரயில் மோதி யானைகள் பலியாவதைத் தடுக்க நடவடிக்கை!

உக்ரைன் – ரஷியா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில் உக்ரைன் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சைபிஹாவும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இத்துடன், ஸ்லோவேனியா, லக்ஸம்பர்க், லட்டிவியா, மால்டோவா, ஜியாஜியா, ஸ்வீடன், ஸ்லோவாக் குடியரசு, பூட்டான், மாலத்தீவு, நார்வே, தாய்லாந்து, அன்டிகுவா மற்றும் பார்புடா, பெரு, கானா, ஹங்கேரி மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், கியூபா நாட்டின் துணைப் பிரதமர் மார்ட்டினேஸ் டையாஸ் மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் என்ரிக். ஏ. மனாலோ ஆகியோரும் கலந்துகொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் நடைபெறவுள்ள பல்வேறு அமர்வுகளில் பங்கேற்கும் பிரதிநிதிகள், உலகின் நிலை குறித்து விவாதித்து பல்வேறு சமகால விஷயங்களில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயவுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *