வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனை கைது செய்ய உத்தரவு!

Dinamani2f2025 01 202f1b1cpxne2fshakib.jpg
Spread the love

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஷேக் ஹசீனாவின் அவமி லீக் கட்சியின் முன்னாள் எம்.பியுமான ஷகிப் அல் ஹசனை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிச.15 அன்று ஐஐஎப்சி வங்கியின் சார்பாக ஷகிப் அல் ஹசன் உள்பட 4 பேரின் மீது ரூ.3 கோடி அளவிலான செக் மோசடியில் ஈடுபட்டதாக வங்கதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

ஷகிப் அல் ஹசனுக்கு சொந்தமான அல்-ஹசன் அக்ரோ ஃபார்ம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் ஐஐஎப்சி வங்கியில் பலமுறை கடன் வாங்கப்பட்டதாகவும், அந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக அவர் வழங்கிய காசோலைகள் அனைத்தும் அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாததினால் செல்லுபடியாகவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே பிணைக் கைதிகள் விடுவிப்பு!

இதனைத் தொடர்ந்து, ஷகிப் அல் ஹசன், அவரது நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தை சார்ந்த மேலும் 3 பேரின் மீதும் வங்கியின் சார்பில் டாக்கா நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை கடந்த டிச.18 அன்று விசாரித்த நீதிமன்றம் அவரை ஜன.19 அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அவர் ஆஜராகாததினால் அவருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

முன்னதாக, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவமி லீக் கட்சியின் மகுறா தொகுதி எம்.பி. ஆன ஷகிப் அல் ஹசன், ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டப் போது நாடுத் தப்பினார்.

ஏற்கனவே, அந்நாட்டில் ஏற்பட்ட மாணவர் புரட்சியின்போது அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி வங்கதேசத்திற்கு திரும்ப மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *