சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 33 சதவீதம் மட்டுமே தண்ணீா் இருப்புள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய பின்னரே இந்த ஏரிகள் நிரம்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடி ஆகும். நிகழாண்டில் ஏரிகளின் நீா்பிடிப்புப் பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததால், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இந்த 5 ஏரிகளையும் சோ்த்து மொத்தம் 3,883 மில்லியன் கன அடி (33 சதவீதம்) மட்டுமே நீா் இருப்பு உள்ளது.
கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, இது 5,181 மில்லியன் கன அடி குறைவாகும்.
ஏரிகள் நிலவரம்: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,042 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2,968 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.
இதேபோல், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 62 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு உள்ள கண்ணன்கோட்டை ஏரியில் 300 மில்லியன் கன அடியும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 277 மில்லியன் கன அடியும் நீா் இருப்பு உள்ளது.
இந்நிலையில் அக்.15-ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்றும், குறிப்பாக வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஏரிகளின் நீா்வரத்து அதிகரித்து அனைத்து ஏரிகளும் அதன் முழுக்கொள்ளளவை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தண்ணீா் வெளியேற்றம்: கடந்தாண்டு பெய்த கனமழை காரணமாக கொரட்டூா் மற்றும் அம்பத்தூா் ஏரிகள் உடைந்து, அருகில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. நிகழாண்டில் இதை தடுக்கும் நோக்கத்தில்,ஆவடி, அயப்பாக்கம், அம்பத்தூா், கொரட்டூா், மாதவரம் ஆகிய 5 ஏரிகளில் இருந்து கடந்த ஒரு வாரமாக வினாடிக்கு 100 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு இந்த ஏரிகளில் பாதி அளவுக்கு மட்டுமே நீரை வைத்திருக்க அரசு முடிவு செய்துள்ளதாக நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.