வயநாடு: கேரள மாநிலம், வயநாடு பகுதியில் நேரிட்ட நிலச்சரிவு பாதிப்பிலிருந்து மீள, மறுசீரமைப்புப் பணிகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவரும், வயநாடு வேட்பாளருமான பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா செவ்வாயன்று வயநாடு மக்களவைத் தொகுதி, இடைத்தேர்தலுக்கான தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு வயநாடு மாவட்டத்தில் நேரிட்ட நிலச்சரிவுப் பகுதிகளின் மறுசீரமைப்புக்கு எந்த நிதியும் வழங்காமல் புறக்கணிக்கிறது என்று குற்றம்சாட்டிய பிரியங்கா, மத்தியில் நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள நிலைப்பாடு, மக்கள் மற்றும் தேசத்தின் மீதான அக்கறையின்மையைக் காட்டுகிறது என்றும், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அது செய்து வரும் அரசியல் மற்றும் அதன் கொள்கைகள் மூலமாகவும் இதுவே தெரிகிறது என்றும் பிரியங்கா கூறினார்.
வயநாடு தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரியங்கா, மோடி தலைமையிலான மத்திய அரசு எடுக்கும் அனைத்துக் கொள்கை முடிவுகளும், அவரது ஐந்து முதல் ஆறு தொழிலதிபர்களுக்கு மட்டுமே பயன்படும், மக்களுக்கு அல்ல.
வயநாடு நிலச்சரிவின்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிட்டு, உரிய உதவிகளை செய்வதாக உறுதியளித்துச் சென்றார். ஆனால், மாதங்கள் சென்ற பிறகும் கூட, மத்திய அரசு, நிவாரணப் பணிகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.