உலகின் பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் 2025ஆம் ஆண்டு பிறந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். அப்போது மக்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டியும் இனிப்புகளை பரிமாறியும் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்கள், தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன. சென்னையில் பாதுகாப்புக்காக 19 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை காமராஜர் சாலையில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே புத்தாண்டு வாழ்த்து எனும் பேரில் அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் apk file அல்லது லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம் என போலீஸார் தரப்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போல தலைநகர் தில்லி, மும்பை, பெங்களூரு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இதையொட்டி உலகெங்கிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது.
இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 4.40 மணிக்கு, நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி. புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, மக்கள் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.