சிவகாசி: வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் கைரேகை பதிவுடன் கூடிய அல்லி மொட்டு வடிவிலான ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடகரையில் உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் 2022 மார்ச்சில் தொடங்கிய முதல்கட்ட அகழாய்வில் 3,254 பொருட்கள், 2023 ஏப்ரலில் தொடங்கிய இரண்டாம் கட்ட அகழாய்வில் 4,660 பொருட்கள் மற்றும் திமிலுடைய காளை, சங்கு வளையல்கள், சூதுபவளம், வணிக முத்திரை, செப்பு நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் 16 குழிகள் தோண்டப்பட்டு, தங்க நாணயம், செப்புக் காசுகள், தங்க அணிகலன், சுடு மண் உருவ பொம்மை, அரிய வகை செவ்வந்திக்கல் மணி சதுரங்க ஆட்டக்காய்கள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 2850-க்கும் மேற்பட்ட பழங்கால தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சுடு மண்ணால் ஆன நீள்வட்டம், கூம்பு வடிவம் மற்றும் அல்லிமொட்டு வடிவம் உடைய ஆட்டக்காய்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காயில் கைரேகை பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பொன் பாஸ்கர் கூறியதாவது: வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் அகழாய்வில் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களுடன், ஆட்டக்காய்கள், சுடுமண் பொம்மைகள் ஆகியவை அதிக அளவில் கிடைத்துள்ளன. இதன் மூலம் அக்கால மக்கள் பொழுதுபோக்குக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது தெரிய வருகிறது.
இப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தொழில் கூடம் செயல்பட்டிருக்கலாம் என்பதையும் அறிய முடிகிறது. ஆட்டக்காயை உற்பத்தி செய்யும்போது எதிர்பாராதவகையில் உற்பத்தி செய்தவரின் கைரேகை பதிவாகி இருக்கலாம். கைரேகையை ஆய்வு செய்தால், உற்பத்தி செய்தவரின் பாலினம், வயது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.