வெயிலில் காத்திருந்த சிறுவர்கள்-வருத்தம் தெரிவித்த நடிகர் பிரபுதேவா

Ok Image
Spread the love

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று(2&ந்தேதி) சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு நமது மாஸ்டர் நமது முன்னாடி என்ற பெயரில் 100 நிமிடம் தொடர்ந்து 100 பிரபுதேவா பாடலுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் நடன கலைஞர்கள் தொடர்ந்து நடனமாடி உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நடிகர் பிரபுதேவா

இதில் நடிகர் பிரபு தேவா பங்கேற்பார் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருந்தனர். இதனால் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ப சிறுவர், சிறுமிகள் அதிக ஆர்வம் காட்டி ஏராளமானோர் பங்கேற்று இருந்தனர்.
வெயிலின் காரணமாக காலை 6 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்குள் முடிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதில் பங்கேற்ற நடன கலைஞர்களிடம் ரூ.1000 முதல் ரூ.2000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நடன நிகழ்ச்சியை
9 மணி ஆகியும் தொடங்கவில்லை. நடிகர் பிரபுதேவாவும் வரவிலை. மேலும் காலை 5 மணிக்கு சிறுவர், சிறுமிகளை வரவழைத்து விட்டு அவர்களுக்கு உணவு போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுக்கவில்லை. தண்ணீர் மட்டுமே கொடுக்கப்பட்டதாக குழந்தைகளை வெயிலில் நிற்கவைத்து இருந்தனர்.

கடும் வாக்குவாதம்

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவர், சிறுமிகளின் பெற்றோர் அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து நடிகர் பிரபு தேவா வராமலேயே அவசர அவசரமாக நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது வீடியோ கால் மூலமாக பிரபுதேவா நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களிடமும், கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகளுடன் பேசினார். தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் வரமுடியவில்லை என தெரிவித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து உலக சாதனை நிகழ்ச்சி நடைபெறாமல் பிரபுதேவாவுக்கு நடன நிகழ்ச்சியை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியாக ஒரு மணி நேரம் நடனக்கலைஞர்கள் குறைந்த எண்ணிக்கையில் நடனமாடினார். பிரபுதேவா மீண்டும் ஒரு நாள் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு தேதி கொடுத்திருப்பதாகவும் அந்த தேதியில் நிகழ்ச்சி மீண்டும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு உலக சாதனை நடத்தப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *