வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?

Dinamani2f2024 09 232f38nqa6s72fvijay.jpg
Spread the love

சென்னை: அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.

தமிழக அரசியல் உலகைப் பொருத்தவரை, திரைத் துறையில் இருந்து அரசியலில் களமிறங்கியவர்களின் பட்டியல் தொடர்ந்து நீள்கிறது. எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜய டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ், ராமராஜன், சரத்குமார், விஜயகாந்த், சீமான், கமல்ஹாசன், கார்த்திக், குஷ்பு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வரிசையில் விஜய் இணைந்துள்ளார். இவர்களில் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் ஏதாவது ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்தவாறு தங்களை பொதுவாழ்வில் அடையாளப்படுத்திக் கொண்டவர்கள்.

எம்ஜிஆரை பொருத்தவரை 1957, 1962, 1967, 1971ஆகிய தேர்தல்களில் திமுகவுக்காக சுழன்று பணியாற்றியவர். நடிகராக இருந்த எம்ஜிஆர், திமுகவின் சட்டமேலவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர், சிறுசேமிப்புக் குழு துணைத் தலைவர், திமுக பொருளாளர் என 20 ஆண்டுகள் திமுகவில் பயணம் செய்து, திமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் அதிமுகவை தொடங்கி ஒரே தேர்தலில் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தவர்.

அதிமுகவில் கொள்கை பரப்புச் செயலர், மாநிலங்களவை உறுப்பினர், சத்துணவுத் திட்ட உறுப்பினர் என ஜெயலலிதாவும் அதிமுகவில் வலம்வந்து எம்ஜிஆருக்கு பின்னர் அவரது பிம்பத்தைப் பயன்படுத்தி கட்சியையும், ஆட்சியையும் பிடித்து கோலோச்சியவர். எனவே, எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் நடிகர் விஜயை ஒப்பிட முடியாது. விஜயகாந்த், கமலுடன் வேண்டுமானால் விஜயை ஒப்பிடலாம்.

விஜயகாந்தை பொருத்தவரை எந்தக் கட்சியிலும் அவர் உறுப்பினராக இருந்தது இல்லை. எம்ஜிஆர் ரசிகர், கருணாநிதி, ஜி.கே.மூப்பனாரின் அனுதாபி என்ற பிம்பத்தைக் கொண்டவர். நடிகர் சங்கத் தலைவராக இருந்து சாதித்த விஜயகாந்துக்கு, தமிழகம் முழுவதும் கட்டமைப்பு கொண்ட ரசிகர் மன்றமும் இருந்தது.

தொடக்க காலத்தில் இருந்தே ஏழைகளுக்கு உதவி செய்யக்கூடிய பிம்பம் விஜயகாந்த் மீது இருந்தது. இதையெல்லாம் கடந்து, 1998, 1999, 2001, 2004 என தொடர் வெற்றி வளையத்தில் இருந்த பாமகவை எதிர்த்ததால்தான் 2006 பேரவைத் தேர்தலில் விஜயகாந்தால் வாக்குவங்கியை உயர்த்த முடிந்தது. பாமக வலுவாக இருந்த விருத்தாசலத்தில் வெற்றியும் பெறமுடிந்தது.

விழுப்புரம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை பகுதிகளில் அதிக வாக்குகள் பெற்ற விஜயகாந்தால், பாமக செல்வாக்கு இல்லாத டெல்டா, தென்மாவட்டங்கள், நகரப் பகுதிகளில் குறைவான வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது.

மேலும், விஜயகாந்த் மாற்று சக்தியாக களத்துக்கு வரும்போது, மாற்றத்துக்கான தலைவராக யாரும் இல்லை. கருணாநிதி-ஜெயலலிதா இருந்தபோதே களத்துக்கு வந்தது அவருக்கு சவாலாக இருந்தது. அவருக்கு தெலுங்கு தாய்மொழியைக் கொண்டவர்களின் ஆதரவும் பலமாக இருந்தது, கருப்பு எம்ஜிஆர் பிம்பம் உள்ளிட்டவற்றால் முதல் தேர்தலில் 8.3 சதவீத வாக்குவங்கி பெறமுடிந்தது.

கமலை பொருத்தவரை முதலில் சந்தித்தது 2019 மக்களவைத் தேர்தல். பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த முடியாத அவரால், அரசியல் களத்தில் யாரை எதிர்த்து வருகிறோம் என்பதைச் சரியாக பதிவு செய்ய முடியவில்லை. கடைசி நிமிஷம் வரை தனித்து நிற்கிறோமா அல்லது திமுக கூட்டணியில் இணைந்து செயல்படப் போகிறோமா என்ற குழப்பத்தில் இருந்தார் கமல்.

இந்தக் குழப்பத்தையும் மீறி பிராமணர்கள், செளராஷ்டிரம், தெலுங்கு பேசுவோர் நிறைந்து வாழும் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், கோவை, மதுரை மக்களவைத் தொகுதிகளில்தான் அதிக வாக்குகள் கிடைத்தன. கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலுக்கு வந்தாலும், சரியான கொள்கையை முன்னிறுத்தாதது, கட்டமைப்பு இல்லாதது உள்ளிட்டவற்றால் 3.78 சதவீத வாக்குகளை மட்டுமே கமலால் பெறமுடிந்தது.

விஜயை பொருத்தவரை திரையுலகில் ரஜினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நடிகராக அறியப்படுகிறார். இவரது மன்றத்துக்கு, ஓரளவு வட மாவட்டங்களில் வரவேற்பு உள்ளது. ஆனால், தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் மன்றம் வலுவாக உள்ளதா என்பது உற்று கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக கிறிஸ்தவ, ஆதிதிராவிட இளைஞர்கள் மற்றும் அனைத்து சமூக இளம்பெண்களிடம் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தேர்தலை சந்திக்க வருவதும், பேரவைத் தேர்தலை நேரடியாகச் சந்திக்க வருவதும் விஜய்க்கு அமைந்த நல்வாய்ப்பு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *