சென்னை: காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் சிலர் மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம், காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களைக் கொண்டு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஆர்.கலா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மலர்விழி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து நேற்று காலை 10 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களில் சிலர் பசி மயக்கத்தில் நேற்று காலை முதல் மயங்கி விழத் தொடங்கினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். சிலருக்கு களத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது.
இதையடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் சங்கத்தினரை சமூக நலத்துறை இயக்குநர் ஆர்.லில்லி அழைத்துப் பேசினார். அப்போது சங்கத்தினர் தங்களது 10 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை இயக்குநரிடம் அளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுதொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. எங்களது கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே துறையின் இயக்குநர், செயலர்களுக்கு தபால் கொடுத்திருந்தோம்.
இயக்குநரை சந்தித்தபோது துறை சார்ந்த சில கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றித் தருவதாக கூறினார். ஆனால் எங்களுடைய நீண்டநாள் கோரிக்கையான காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம், காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்குதல் போன்றவை நிறைவேற்றப்படவில்லை. இன்றைக்கு 63 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அடுத்தகட்ட நடவடிக்கை செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.