110 கி.மீ. வேகம்: வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி @ சென்னை – ராணிப்பேட்டை | 110 KM per Hour Speed: Vande Metro Train Trial Run between Chennai – Ranipet a Success

1290197.jpg
Spread the love

சென்னை: சென்னை – ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரோடு இடையே முதல் வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது.

சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் ஆலையில் முதல் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி கடந்த மாதம் முடிந்தது. 150 கி.மீ. முதல் 200 கி.மீ. தொலைவில் உள்ள நகரங்களுக்கு இடையே இயக்கும் விதமாக இந்த ரயில் தயாரிக்கப்பட்டது. 12 பெட்டிகளை கொண்ட இந்தரயிலில் ஏசி வசதி, பயணிகளை கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் இடம்பெற்றுள்ளன. கண்காணிப்பு கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 104 பேர் அமர்ந்து செல்லலாம். 200பேர் நிற்க முடியும். அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில், உள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, ஐ.சி.எஃப் ஆலையில் இந்த ரயிலில் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து, சென்னை – காட்பாடி இடையே இந்த ரயிலை இயக்கி சனிக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை – ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரோடு இடையே நேற்று காலை தொடங்கியது. இந்த ரயில் வில்லிவாக்கத்தில் இருந்து நேற்று காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, காலை 9 மணிக்கு சென்னை கடற்கரையை அடைந்தது.

தொடர்ந்து, அங்கிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, வில்லிவாக்கத்தை காலை 10 மணிக்கு அடைந்தது. அங்கு இந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக் குமார் கார்க், ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு உயரதிகாரிகள், ஐ.சி.எஃப் அதிகாரிகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். தொடர்ந்து, வில்லிவாக்கத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் அரக்கோணம் வழியாக வாலாஜா ரோடை அடைந்தது. தொடர்ந்து, அங்கிருந்து வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்டது. அப்போது இந்த ரயிலை மணிக்கு 110 கி.மீ.வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வில்லிவாக்கம் – வாலாஜா ரோடு இடையே இந்த ரயிலை இயக்கி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ரயிலை மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது. வந்தே மெட்ரோ ரயிலின் வேகம், சிக்னல் தொழில் நுட்பம், ரயில் நிலையங்களில் நடை மேடைகளில் சரியாக நிற்கிறதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ரயில் சோதனை அறிக்கை வரும் திங்கள்கிழமை கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் எந்த வழித்தடத்தில் இயக்குவது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *